அடையாளக் கற்கள் நடும் பணி


அடையாளக் கற்கள் நடும் பணி
x
தினத்தந்தி 30 Jan 2022 5:08 PM GMT (Updated: 30 Jan 2022 5:08 PM GMT)

ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையே ரெயில்பாதை அமைய உள்ள இடங்களில் எல்லையை வரையறுத்து அடையாளக் கற்கள் நடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ராமேசுவரம், 
ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையே ரெயில்பாதை அமைய உள்ள இடங்களில் எல்லையை வரையறுத்து அடையாளக் கற்கள் நடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கொந்தளிப்பு
ராமேசுவரத்தில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலை வில் உள்ளது புயலால் அழிந்து போன தனுஷ்கோடி. அதுபோல் 1964-ம் ஆண்டுக்கு முன்பு வரையிலும் ராமேசு வரம்- தனுஷ்கோடி இடையே ரெயில் போக்குவரத்தும் இருந்துள்ளது. மிகப்பெரிய தொழில் நகரமாக விளங்கிய தனுஷ்கோடி நகரமானது கடந்த 1964-ம் ஆண்டு டிசம்பர் 23-ந் தேதி ஏற்பட்ட புயல் மற்றும் பயங்கர கடல் கொந்த ளிப்பால் முழுமையாக அழிந்து போனது.
இந்த புயலில் ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையிலான ரெயில் பாதை தண்டவாளம் முழுமையாக கடலில் மூழ்கி சேதமடைந்தது. அதன் பின்னர் ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையே ரெயில் போக்குவரத்து முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
அனுமதி
அதுபோல் ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையே மீண்டும் ரெயில் பாதை அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதைத்தொடர்ந்து ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையே மீண்டும் ரெயில் பாதை அமைய உள்ள இடங் களில் கடந்த ஆண்டு மண் பரிசோதனை ஆய்வு நடைபெற்று முடிந்துள்ளது. தொடர்ந்து கடந்த மாதம் ராமேசுவரம் முதல் தனுஷ்கோடி வரை ரெயில் பாதை அமையவுள்ள இடங்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் சுத்தப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் ராமேசுவரம் - தனுஷ்கோடி இடையே மீண்டும் ரெயில் பாதை அமைய உள்ளதால் ரெயில்பாதை அமைய உள்ள இடங்களின் இடத்தை அடையாளம் கண்டு எல்லையை வரையறுக்கும் பணியானது தீவிரமாக நடை பெற்று வருகிறது. முதல்கட்டமாக கோதண்டராமர் கோவில் அருகே உள்ள சாலையில் இருந்து ரெயில் பாதை முடிவ டையும் தனுஷ்கோடி கம்பிபாடு வரையிலான எட்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் இருந்து சுமார் 15 மீட்டர் தூரத்தில் ரெயில் பாதை அமைய உள்ள இடத்தில் சுமார் 3 அடி உயரத்தில் கல் ஒன்று கான்கிரீட் கலவைகள் மூலம் பூசி நட்டுவைத்து அடையாளம் காணப்பட்டு வருகிறது.
ரெயில்பாதை
 2-வது கட்டமாக ராமேசுவரத்தில் இருந்து கோதண்டராமர் கோவிலுக்கு இடைப்பட்ட 10 கிலோமீட்டர் தூர பகுதியில் அடையாள கற்கள் நடப்பட்டு எல்லை வரையறுக்கப்படும். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வரும் இந்த பணியில் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு கடற்கரையை ஒட்டிய ரெயில்பாதை அமைய உள்ள இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட எல்லைகளுக்காக அடையாள கற்கள் நடப்பட்டு உள்ளன. இதுபற்றி ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- ராமேசுவரம்- தனுஷ்கோடி இடையே மீண்டும் ரெயில் பாதை திட்டம் தொடங்கப்பட உள்ளது. 
ராமேசுவரத்தில் இருந்து தொடங்கும் இந்த புதிய ரெயில் பாதையில் தனியாருக்கு சொந்தமான வீடு மற்றும் வனத் துறைக்கு சொந்தமான இடங்களையும் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. வனத்துறையினரிடம் இது குறித்து எழுத்துபூர்வமாக இடம் கேட்கப்பட்டு உள்ளது. அதற்கான இடம் விரைவில் ஒதுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 
ரெயில் நிலையம்
ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையே 58 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரெயில் பாதை திட்டம் தொடங்கப்பட உள்ளதுடன் 18 கிலோ மீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ரெயில்பாதை இடைப்பட்ட பகுதிகளில் 3 ெரயில் நிலையங்களும் அமைய உள்ளதாக கூறப்படுகிறது.

Next Story