நெற்பயிர்களை தாக்கும் கதிர் நாவாய் பூச்சிகளை கட்டுப்படுத்துவது எப்படி?


நெற்பயிர்களை தாக்கும் கதிர் நாவாய் பூச்சிகளை கட்டுப்படுத்துவது எப்படி?
x
தினத்தந்தி 30 Jan 2022 7:19 PM GMT (Updated: 30 Jan 2022 7:19 PM GMT)

சீர்காழி பகுதியில் நெற் பயிர்களை தாக்கும் கதிர் நாவாய் பூச்சிகளை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

சீர்காழி:
சீர்காழி பகுதியில் நெற் பயிர்களை தாக்கும் கதிர் நாவாய் பூச்சிகளை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கதிர் நாவாய்ப்பூச்சிகள்
சீர்காழி பகுதியில் கதிர் நாவாய்ப்பூச்சியின் தாக்குதலானது மிகவும் அதிக அளவில் இருப்பதாக தெரிவித்தார். பூச்சியின் குஞ்சுகள் பச்சை அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். காலையிலும் மாலையிலும் பூச்சிகள் அதிக அளவில் நெல் மணிகளில் சாற்றை உறிஞ்சுகிறது. நெல் மணிகளில் பூச்சியானது வாயுறுப்பை செலுத்தி உண்பதால் அப்பகுதி பழுப்பு நிற புள்ளிகளாக மாறிவிடும்.
இந்த துளையின் வழியாக பூஞ்சாணம் உட்புகுவதால் நெல் மணிகள் பாதிப்படைந்து கருமை நிறமாக மாறும். தாக்குதல் தீவிரம் அடையும் போது மணிகள் பதறாக மாறும். பூச்சிகள் இருப்பதை துர்நாற்ற வாடையில் இருந்து தெரிந்து  கொள்ளலாம். பூச்சிகளின் அடையாளம் முட்டைகள் வட்டமாக பழுப்பு நிற விதை போன்று இரண்டு மில்லி மீட்டர் நீளம் கொண்டு இரு வரிசைகளில் கூட்டமாக இருக்கும். 
இலைகளின் மேல்பரப்பில் உள்ள இலை நடுநரம்பு பகுதியில் முட்டைகள் இடப்பட்டிருக்கும். முதல் வளர்நிலை பூச்சிகள் மிகவும் சிறியதாக இரண்டு மில்லி மீட்டர் நீளம் கொண்டு வெளிறிய பச்சை நிறமாக இருக்கும். அடுத்தடுத்த வளர்ச்சி நிலைகளில் கரும்பச்சை நிறமாக மாறிவிடும். முதிர்ச்சி நிலையை அடைந்த பூச்சிகள் பச்சையான மஞ்சள் நிறமாகவும் நீளமாக மெலிந்தும் நாவாய்ப்பூச்சி கூறிய வெறுக்கத்தக்க ஒரு மணத்துடன் இருக்கும்.
கட்டுப்படுத்தும் முறை
நாவாய்ப்பூச்சிகளை இயற்கையாக கட்டுப்படுத்தும் முறை 10 கிலோ வசம்பு தூளை காலையில் ஒரு ஏக்கரில் நேரடியாகவோ அல்லது மணலுடன் கலந்து தூவலாம் அல்லது வேப்பங்கொட்டை சாற்றை தெளிக்கலாம். மருந்துகளான புப்ரோசின் 400 மில்லி, பிப்ரோனில் 5 சதம் 2.5 மில்லி, டைக்குளோரோவாஸ் 76 சதவீதம் ஒரு மில்லி. இவைகளில் ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்கருக்கு பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன் பெறலாம். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story