கூலி தொழிலாளி மகளின் டாக்டர் கனவு நனவாகிறது


கூலி தொழிலாளி மகளின் டாக்டர் கனவு நனவாகிறது
x
தினத்தந்தி 30 Jan 2022 8:26 PM GMT (Updated: 2022-01-31T01:56:32+05:30)

கல்வி கட்டணத்தை அரசே செலுத்துவதால் ஏழை கூலி தொழிலாளி மகளின் டாக்டர் கனவு நனவாகிறது. மருத்துவப்படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவி விடுதிக்கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வருகிறார். தனக்கு உதவிக்கரம் நீட்ட அவர் கோரிக்கை விடுத்து உள்ளார்.

சோழவந்தான்கல்வி கட்டணத்தை அரசே செலுத்துவதால் ஏழை கூலி தொழிலாளி மகளின் டாக்டர் கனவு நனவாகிறது. மருத்துவப்படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவி விடுதிக்கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வருகிறார். தனக்கு உதவிக்கரம் நீட்ட அவர் கோரிக்கை விடுத்து உள்ளார்.

2 முறை நீட்டில் வெற்றி பெற்றவர்

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தை அடுத்த பானாமூப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சன்னாசி. இவருடைய மகள் தங்கபேச்சி(வயது 19). இவர் விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் கடந்தாண்டு பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.தொடர்ந்து மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு எழுதினார். அதிலும் வெற்றி பெற்று கலந்தாய்வில் தனியார் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தது. இதற்கான கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் கடந்த ஆண்டு தங்கபேச்சி கல்வியை தொடர முடியவில்லை.
இந்த நிலையில் தங்கபேச்சி இந்த ஆண்டு தனியார் பயிற்சி வகுப்பிற்கு சென்று நீட் தேர்வு எழுதினார். இதில் 256 மதிப்பெண் பெற்று அரசு ஒதுக்கீட்டில் கன்னியாகுமரி மாவட்டம் மூகாம்பிகை மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. 

விடுதி கட்டணம்

கல்விக் கட்டணத்தை மட்டும் செலுத்தி விடுவதாக அரசு கூறியுள்ளது.தங்கும் விடுதி கட்டணம், பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட இதர செலவினங்களுக்கு பொருளாதார வசதி இல்லாததால் மாணவி தங்கபேச்சி தவித்து வருகிறார். 
இதுகுறித்து மாணவி தங்கபேச்சி கூறியதாவது:-
எனது தந்தை சன்னாசி என்னை மிகவும் சிரமப்பட்டு பள்ளிக்கல்வி வரை படிக்க வைத்துள்ளார் நான் மட்டும் இல்லை. என் உடன் பிறந்த 3 சகோதரிகளையும் மிகவும் சிரமப்பட்டு படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். சிறுவயது முதலே எனக்கு டாக்டராக வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அதற்காக கஷ்டப்பட்டு படித்தேன்.அரசு வழிகாட்டுதல்படி நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தும் கல்வி கட்டணம் செலுத்த முடியாததால் கடந்த ஆண்டு படிப்பைத் தொடர முடியவில்லை. அதற்கு பின்பாக தமிழக அரசு கட்டணத்தைச் செலுத்தி வருவதாக தகவல் கிடைத்தது.
உதவிக்கரம் நீட்ட கோரிக்கை
இந்த ஆண்டு தனியார் பயிற்சி வகுப்பிற்கு சென்று நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளேன்.மருத்துவ கலந்தாய்வில் எனக்கு கன்னியாகுமரி மூகாம்பிகை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. அரசு கல்வி கட்டணத்தை செலுத்துவதாக கூறி இருப்பதால் தான் டாக்டராக வேண்டும் என்ற கனவு நனவாகிறது. இதனால் அரசுக்கு என் குடும்பத்தார் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஆனால் விடுதிக்கட்டணம், பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட இதர செலவுகளுக்கு குடும்ப சூழ்நிலையால் எப்படி பணம் கட்ட போகிறோம் என்று தவித்து வருகிறேன். இதற்கு அரசு, சமூக நல ஆர்வலர்கள் உதவிக்கரம் நீட்ட வேண்டும்.
படிக்கும் போதே அக்கம், பக்கத்து தோட்டத்தில் கூலிக்கு பூக்கள் பறித்து அதில் கிடைக்கும் வருமானத்தில் தான் பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட செலவுகளை சமாளித்து வந்தேன். அரசு பள்ளியில் படித்த மாணவ-மாணவிகளுக்கு மருத்துவப்படிப்பில் 7½ சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியதால் தான் என்னை போன்ற கிராமப்புற மாணவ-மாணவிகளின் மருத்துவப்படிப்பு கனவும் நனவாகிறது. இதற்கும் அரசுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story