வாகனங்களில் கட்சி கொடிகளை அகற்றிய பறக்கும் படையினர்


வாகனங்களில் கட்சி கொடிகளை அகற்றிய பறக்கும் படையினர்
x
தினத்தந்தி 30 Jan 2022 9:00 PM GMT (Updated: 2022-01-31T02:30:07+05:30)

வாகனங்களில் கட்சி கொடிகளை அகற்றிய தேர்தல் பறக்கும் படையினர் அகற்றினர்.

ஜெயங்கொண்டம்:

வாகன சோதனை
அரியலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள ஜெயங்கொண்டம் நகராட்சி மற்றும் வரதராஜன்பேட்டை பேரூராட்சி ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வாகனங்களில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்டறிய வாகன சோதனை நடத்திட தலா 3 தேர்தல் பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஒரு தேர்தல் பறக்கும் படையில் தாசில்தார் பொறுப்பிலான அதிகாரி ஒருவர், 2 போலீஸ்காரர்கள், ஒரு வீடியோ எடுப்பவர் என மொத்தம் 24 பேர் நியமிக்கப்பட்டு காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரையும், மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரையும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையும் என 6 குழுக்களாக பிரிக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்
இந்நிலையில் நேற்று ஜெயங்கொண்டம் நகராட்சி மற்றும் வரதராஜன்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அரசியல் கட்சியினர் வந்த வாகனங்களில் கட்சி கொடிகள் அகற்றப்பட்டு, வாகனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் அனுப்பி வைக்கப்பட்டது. இருசக்கர வாகனங்களில் வந்தவர்களையும் சோதனையிட்ட பின்னர் அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கூறுகையில், வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் அனுமதிக்கப்பட்ட தொகைக்கு மேல், தாங்கள் கொண்டு வரும் பணத்துக்கு உரிய ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டும். ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, கருவூலத்தில் ஒப்படைக்கப்படும். பின்னர் உரிய ஆவணங்களை காண்பித்து அவர்கள் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் கட்டாயம் மதித்து அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், என்றனர்.

Next Story