அரியலூர் மாணவி சாவுக்கு ஆதாரத்துடன் நீதி கேட்கிறோம்; பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி


அரியலூர் மாணவி சாவுக்கு ஆதாரத்துடன் நீதி கேட்கிறோம்; பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி
x
தினத்தந்தி 30 Jan 2022 9:01 PM GMT (Updated: 30 Jan 2022 9:01 PM GMT)

அரியலூர் மாணவி சாவுக்கு ஆதாரத்துடன் நீதி கேட்கிறோம் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

கீழப்பழுவூர்:

பெற்றோருக்கு ஆறுதல்
அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் லாவண்யா(வயது 16). தஞ்சையை அடுத்துள்ள மைக்கேல்பட்டி தனியார் கிறிஸ்தவ பள்ளிக்கூட விடுதியில் தங்கி படித்து வந்த இவர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து மாணவி லாவண்யாவின் பெற்றோருக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., கட்சியின் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் அவர்களிடம் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.
பின்னர் மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-
சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும்
மாணவியின் தற்கொலைக்கு நீதி கிடைக்கும் வரை பா.ஜ.க. போராடும். மேலும் பா.ஜ.க. குழு நாளை (செவ்வாய்க்கிழமை) அரியலூர் வர உள்ளது. அவர்களும் இந்த குடும்பத்தை வந்து சந்திப்பார்கள். மாணவியின் மரணத்தைவிட போலீசாரின் விசாரணையே மாணவியின் பெற்றோருக்கு மனக்கஷ்டத்தை அளித்து வருகிறது. ஆளும் கட்சியினர் மற்றும் போலீசார், இவர்களைத்தான் குற்றவாளிகள் என முடிவு செய்து அவ்வாறு நடத்துகின்றனர். அனைத்து மதத்தினரும் பா.ஜ.க.வில் உள்ளனர். குறிப்பிட்ட மதத்தினரை மட்டும் கொண்ட கட்சி பா.ஜ.க. என்பது தவறு. எந்த மதத்தினருக்கும் எதிரான கட்சி பா.ஜ.க. அல்ல.
எனவே மாணவியின் மரணத்தில் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் நடுநிலையான விசாரணை நடைபெற, இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று பா.ஜ.க. சார்பில் வலியுறுத்துகிறோம். மாணவியின் வீடியோவை அடிப்படையாக வைத்து பா.ஜ.க. குரல் கொடுத்து வருகிறது. வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து பா.ஜ.க. போராடுகிறது. இறக்கும் தருவாயில் எந்த ஒரு குழந்தையும் பொய் சொல்ல வாய்ப்பில்லை. ஒரு மதத்தை சேர்ந்த 2 மனிதர்கள் செய்த தவறுதான் இது.
தி.மு.க. அரசியல் செய்தது
ஆட்சிப்பொறுப்பில் இருப்பவர்கள், பொறுப்பில்லாமல் பேசுவதால், நீதி கிடைக்குமா? என்ற சந்தேகம் வந்துள்ளது. இதில் புலனாய்வு துறையினர் தவறான அறிக்கையை முதல்-அமைச்சருக்கு தெரிவித்துள்ளனர். அனிதாவிற்கு ஒரு நியாயம்? லாவண்யாவிற்கு ஒரு நியாயமா?. எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் நீட் தேர்வில் அனிதாவின் உடலை வைத்து தி.மு.க. அரசியல் செய்தது. ஆனால் அது போன்று பா.ஜ.க. செய்யாது. அதற்கான அவசியம் இல்லை. நாங்கள் ஆதாரத்துடன் லாவண்யாவிற்கு நீதி கேட்கிறோம். அனைத்து மதத்தினரையும் ஆதரிக்கும் கட்சி பா.ஜ.க.தான். யாரையும் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வதை பா.ஜ.க. எதிர்க்கிறது.
பெரும்பாலான மாநிலங்களில் கட்டாய மதமாற்ற தடை சட்டம் நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வருவதில் தி.மு.க. அரசுக்கு என்ன பிரச்சினை. தமிழகத்தில் காவல்துறைக்கு சுதந்திரம் இல்லை. காவல்துறையை சுதந்திரமாக செயல்பட தி.மு.க. அரசு அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story