சிவகிரி அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்த தையல் தொழிலாளி சாவு


சிவகிரி அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்த தையல் தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 30 Jan 2022 10:37 PM GMT (Updated: 2022-01-31T04:07:10+05:30)

பாலத்தில் இருந்து தவறி விழுந்த தையல் தொழிலாளி இறந்தார்

சிவகிரி:
சிவகிரி அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்த தையல் தொழிலாளி இறந்தார்.
தொழிலாளி
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தேவிபட்டணம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் லூர்து மகன் ஈஸ்வரன் (வயது 39). இவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஒரு கடையில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு பாக்கியலட்சுமி (28) என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் உள்ளனர்.
ஈஸ்வரனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் ஈஸ்வரன் நேற்று முன்தினம் இரவு பெரியகுளம் கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் ஓடை பாலம் அருகே மது குடிப்பதற்காக சென்றுள்ளார். அதன்பின்னர் ஈஸ்வரன் வீடு திரும்பவில்லை.
சாவு
இந்த நிலையில் நேற்று காலையில் அப்பகுதியில் சென்றவர்கள், பாலத்தின் கீழ் ஈஸ்வரன் பிணமாக கிடப்பதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அவரது தலையில் காயங்கள் இருந்தன.
இதுகுறித்து தேவிபட்டணம் கிராம நிர்வாக அலுவலர் பாக்கியராஜ், சிவகிரி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், பாலத்தில் இருந்து தவறி விழுந்து ஈஸ்வரன் இறந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story