காய்ந்த மூங்கில்களை கணக்கெடுக்கும் பணி


காய்ந்த மூங்கில்களை கணக்கெடுக்கும் பணி
x
தினத்தந்தி 31 Jan 2022 1:08 PM GMT (Updated: 2022-01-31T18:38:27+05:30)

கூடலூரில் காட்டுத்தீபரவுவதை தடுக்க காய்ந்த மூங்கில்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது. தொடர்ந்து வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது

கூடலூர்

கூடலூரில் காட்டுத்தீபரவுவதை தடுக்க காய்ந்த மூங்கில்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது. தொடர்ந்து வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மூங்கில்கள்

நீலகிரி மாவட்டம் கூடலூர், முதுமலை வனத்தில் சந்தனம், தேக்கு, ரோஸ்வுட் உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்களும், காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு மிகவும் பிடித்தமான மூங்கில்களும் உள்ளன. மூங்கில்களின் ஆயுள் காலம் சுமார் 40 ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. 

இதற்கிடையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கூடலூர் வன கோட்டத்துக்கு உட்பட்ட பிதிர்காடு, சேரம்பாடி வனப்பகுதியில் வயது முதிர்ச்சி அடைந்ததை உணர்த்தும் வகையில் மூங்கில்கள் பூத்தது. தொடர்ந்து ஆயிரக்கணக்கான மூங்கில்கள் காய்ந்து போனது. உடனே வனத்துறையினர் மூங்கில்களை கணக்கெடுத்து வெட்டி அகற்றினர். பின்னர் தமிழ்நாடு காகித நிறுவனத்துக்கு மூங்கில்கள் கொண்டு செல்லப்பட்டது.

தீயில் கருக வாய்ப்பு

இதேபோன்று கூடலூர், முதுமலை வனத்தில் வளர்ந்து 40 ஆண்டுகளுக்கு மேலான மூங்கில்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூத்து காய்ந்தது. இந்த நிலையில் கூடலூர் பகுதியில் கோடைகாலம் தொடங்கி விட்டதால் காட்டு தீ பரவும் அபாயம் உள்ளது. 

இதனால் காய்ந்துபோன மூங்கில்கள் தீயில் கருக வாய்ப்பு உள்ளது. இதையடுத்து வனத்துறைக்கு வருவாய் இழப்பு ஏற்படாமல் தடுக்க காய்ந்துபோன மூங்கில்களை வெட்டி அகற்றுவதற்கான ஏற்பாடுகளை வனத்துறையினர் தொடங்கி உள்ளனர். முதற்கட்டமாக கூடலூர் அள்ளூர் வயல், பாடந்தொரை, ஸ்ரீ மதுரை உள்பட பல இடங்களில் வனவர் செல்லதுரை தலைமையிலான வனத்துறையினர் காய்ந்துபோன மூங்கில்களை கணக்கெடுத்து வருகின்றனர்.

வருமானம் கிடைக்கும்

அதில், மூங்கில்களில் எண்களை குறிப்பிட்டு அடையாளப்படுத்தி வருகின்றனர். மேலும் கூடலூரில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் காய்ந்து நிற்கும் மூங்கில்களையும் வனத்துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர். 

இதுகுறித்து வனச்சரகர் கணேசன் கூறும்போது, தோராய மகசூல் மதிப்பீடு அடிப்படையில் கூடலூர் பகுதியில் காய்ந்த மூங்கில்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் மூங்கில்கள் நிற்கும் இடம், சர்வே எண்கள் ஆகியவை சேகரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து துறை ரீதியாக தமிழ்நாடு காகித நிறுவனத்துக்கு மூங்கில்கள் விற்கப்படும். இதன் மூலம் வனத்துறைக்கு பல லட்சம் ரூபாய்வருவாய் கிடைக்கும் என்றார்.


Next Story