தை அமாவாசையையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவில், மணிமுக்தாற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்


தை அமாவாசையையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவில், மணிமுக்தாற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
x
தினத்தந்தி 31 Jan 2022 4:48 PM GMT (Updated: 31 Jan 2022 4:48 PM GMT)

தை அமாவாசையையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவில், மணிமுக்தாற்றில் ஏராளமானவர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

விருத்தாசலம், 

தை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் இந்துக்கள் தங்களது முன்னோர்களுக்கு ஆற்றங்கரை, கடற்கரை போன்ற நீர்நிலை கரையோரம் அமர்ந்து தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம்.  தை அமாவாசை தினமான நேற்று சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிவகங்கை குளக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக அதிகாலை முதலே ஏராளமானவர்கள் குவிந்தனர். விரதம் இருந்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் குளக்கரையோரம் வரிசையாக அமர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். பின்னர் கோவிலுக்கு சென்று நடராஜரை தரிசனம் செய்தனர். 

மணிமுக்தாறு 

இதேபோல் விருத்தாசலம் மணிமுக்தாற்றில் பொதுமக்கள் திரண்டு தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். பின்னர் அனைவரும் விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் ஆற்றங்கரை, கடற்கரை, நீர் நிலைகளில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். 

Next Story