ராமேசுவரம் அக்னிதீர்த்த கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள்


ராமேசுவரம் அக்னிதீர்த்த கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள்
x
தினத்தந்தி 31 Jan 2022 5:03 PM GMT (Updated: 2022-01-31T22:33:04+05:30)

தை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

ராமேசுவரம், 

தை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். 

தை அமாவாசை 

தை மற்றும் ஆடி அமாவாசை, புரட்டாசி மாத மகாளய அமாவாசை நாட்கள் முன்னோர் வழிபாட்டுக்கு உகந்ததாகும். இந்த நாட்களில் அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்கும் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு திதி தர்ப்பண பூஜை செய்வதற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.
இந்த நிலையில் இந்த ஆண்டின் தை அமாவாசையான நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் அதிகாலையில் இருந்தே குவிந்திருந்தனர். 
கடலில் புனித நீராடி விட்டு கடற்கரையில் அமர்ந்து புரோகிதர்கள் மூலம் தங்களது முன்னோர்களை வேண்டி தர்ப்பண பூஜைகள், சங்கல்ப பூஜைகள் செய்தும் எள், பச்சரிசி மாவு உருண்டையை கடலில் கரைத்தும் வழிபாடு செய்தனர்.

நீண்ட வரிசை 

இதே போல் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் நீராடவும், சாமி தரிசனம் செய்யவும் வடக்கு கோபுர வாசல் பகுதியில் இருந்து, கிழக்கு வாசல் வரையிலும், தெற்கு கோபுர வாசல் பகுதியில் இருந்து கோவில் அலுவலகம் வரையிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.
தை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் நேற்று மதியம் ஒரு மணி அளவில் சுவாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனத்திலும், ராமபிரான் தங்க கருட வாகனத்திலும் பஞ்ச மூர்த்திகளுடன் அக்னிதீர்த்த கடற்கரை பகுதிக்கு எழுந்தருளினர். தொடர்ந்து அக்னி தீர்த்த கடலில் தீர்த்தவாரி பூஜை நடைபெற்று மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மாலை 6 மணிக்கு பிறகு மீண்டும் அக்னி தீர்த்த கடற்கரை பகுதியில் இருந்து சுவாமி-அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் ரத வீதிகளை சுற்றி வந்து, கோவிலை அடைந்தனர்.
பக்தர்கள் கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் கோவிலில் சுவாமி மற்றும் அம்பாள் சன்னதி பிரகாரம் மற்றும் மூன்றாம் பிரகாரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டதால் பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக வரிசையில் நின்றபடி நெரிசல் இல்லாமல் சுவாமி-அம்பாளை தரிசனம் செய்தனர். பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் கோவில் இணை ஆணையர் பழனி குமார் தலைமையில் மேலாளர் சீனிவாசன், சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், பேஷ்கார்கள் கமலநாதன் ராமநாதன் முனியசாமி, அண்ணாதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். 
போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின்பேரில் ராமேசுவரம் உதவி சூப்பிரண்டு தீபக் சிவாஜ் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் கோவில், ரத வீதிகளில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

பக்தர்கள் மகிழ்ச்சி 

வழக்கமாக மதியம் 1 மணிக்கு சாத்தப்படும் கோவில் நடையானது, தை அமாவாசையையொட்டி நேற்று பகல் முழுவதும் திறந்து இருந்தது. இரவில் வழக்கமான நேரத்தில்தான் நடை அடைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு காரணமாக தை அமாவாசை, மற்றும் ஆடி அமாவாசை நாளன்று கோவிலில் சாமி உலா வரும் நிகழ்ச்சி 3-ம் பிரகாரத்தில் நடைபெற்றது. ஆனால், இந்த ஆண்டு தை அமாவாசையை முன்னிட்டு நேற்று சுவாமி-அம்பாள், ராமபிரான் அக்னி தீர்த்த கடற்கரையில் தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளியதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story