நாகை, வேதாரண்யம் கடலில் திரளானோர் புனித நீராடினர்


நாகை, வேதாரண்யம் கடலில் திரளானோர் புனித நீராடினர்
x
தினத்தந்தி 31 Jan 2022 5:56 PM GMT (Updated: 2022-01-31T23:26:13+05:30)

தை அமாவாசையையொட்டி நாகை, வேதாரண்யம் கடலில் திரளானோர் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.

வேதாரண்யம்:
தை அமாவாசையையொட்டி நாகை, வேதாரண்யம் கடலில் திரளானோர் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.
தை அமாவாசை
மாதந்தோறும் அமாவாசை அன்று  முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து  வழிபடுவது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் குடும்பம் செழிப்பாக இருக்கும் என்பது ஐதீகம். 
தற்போது நவீன காலத்தில் மாதம் தோறும் தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் தை, ஆடி மற்றும் மகாளயபட்ச அமாவாசை அன்று நீர்நிலைகளில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கமாக கொண்டுள்ளனர். 
கடலில் புனித நீராடினர்
 அதன்படி நேற்று  தை மாத அமாவாசையையொட்டி கோடியக்கரையில் உள்ள அக்னி தீர்த்தகடல் பகுதியில் சித்தர் கட்டத்திலும், வேதாரண்யத்தில் சன்னதி கடல் என்று அழைக்கப்படும் வேதநதி கடலிலும் திரளானோர் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். காலை முதலே தர்ப்பணம் கொடுக்க திரளானோர் குவிந்ததால் கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பின்னர் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்தனர்
தை அமாவாசையையொட்டி வேதாரண்யம் நகராட்சி நிர்வாகம், கோடியக்காடு, கோடியக்கரை ஊராட்சி மன்ற நிர்வாகிகள் குடிநீர், உணவு, சுகாதார வசதி  செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வேதாரண்யம் ேபாலீசார் செய்திருந்தனர். 
முன்னோர்களுக்கு தர்ப்பணம்
இதேபோல நாகை புதிய கடற்கரையில்  திரளான பொதுமக்கள்  தங்களது முன்னோர்களுக்கு அகத்தி கீரை, காய்கறிகள், பழங்கள், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை படையலிட்டு தர்ப்பணம் கொடுத்தனர்.
பின்னர் கடலில் புனித நீராடினர். நேற்று நாகை புதிய கடற்கரையில் அதிகாலையில் இருந்தே பொதுமக்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.  கடந்த 2 ஆண்டுகளாக தை அமாவாசையன்று கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக கடற்கரை உள்ளிட்ட நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுக்க  தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதால் கடற்கரையில் தர்ப்பணம் கொடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Next Story