நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x
தினத்தந்தி 1 March 2022 7:58 PM GMT (Updated: 2022-03-02T01:28:38+05:30)

விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்ட்டது.

விழுப்புரம்

விழுப்புரம் அருகே உள்ள வெங்கந்தூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி கிருஷ்ணவேணி (வயது 45). இவர் கடந்த 2.9.2016 அன்று  விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகில் சாலையை கடக்க முயன்றார். அப்போது  அரசு டவுன் பஸ் மோதியதில் கிருஷ்ணவேணி இறந்தார். இதுகுறித்து விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக நஷ்ட ஈடு வழங்கக்கோரி கிருஷ்ணவேணியின் கணவர் சுப்பிரமணியன், விழுப்புரம் மாவட்ட மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த அப்போதைய நீதிபதி, பாதிக்கப்பட்ட கிருஷ்ணவேணியின் குடும்பத்திற்கு சம்பந்தப்பட்ட விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் நஷ்டஈடாக ரூ.7 லட்சத்து 78 ஆயிரத்து 750-ஐ வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் அரசு போக்குவரத்துக்கழகம் நஷ்ட ஈடு வழங்காததால் மனுதாரர் சுப்பிரமணியன் சார்பில் வக்கீல் கேசவன் நிறைவேற்று மனுதாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) செங்கமலச்செல்வன், கிருஷ்ணவேணியின் குடும்பத்திற்கு நஷ்டஈடாக வட்டியுடன் சேர்த்து ரூ.11 லட்சத்து 13 ஆயிரத்து 373-ஐ வழங்க வேண்டும். இல்லையெனில்  அரசு போக்குவரத்துக்கழக பஸ் ஜப்தி செய்யப்படும் என்று உத்தரவிட்டார். 

இருப்பினும் கிருஷ்ணவேணியின் குடும்பத்திற்கு உரிய காலத்திற்குள்  நஷ்ட ஈடு தொகை வழங்கப்படவில்லை.
இந்நிலையில் நேற்று விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து புதுச்சேரிக்கு புறப்பட தயாராக இருந்த அரசு பஸ்சை கோர்ட்டு உத்தரவின்படி வக்கீல் கேசவன், உதவியாளர் விமல் குமார், மனுதாரர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் சுந்தரராஜன் ஜப்தி செய்தார். இதையறிந்ததும் அரசு போக்குவரத்துக்கழகத்தினர், ரூ.9 லட்சத்து 75 ஆயிரத்து 682-க்கான காசோலையை உடனடியாக கோர்ட்டில் செலுத்தினர். மீதமுள்ள ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்து 691-ஐ ஒரு வார காலத்திற்குள் செலுத்தி விடுவதாக உறுதியளித்ததன்பேரில் அந்த பஸ் விடுவிக்கப்பட்டது.

Next Story