விராலிமலை அருகே புரசம்பட்டியில் மீன்பிடி திருவிழா


விராலிமலை அருகே  புரசம்பட்டியில் மீன்பிடி திருவிழா
x
தினத்தந்தி 2 April 2022 5:51 PM GMT (Updated: 2 April 2022 5:51 PM GMT)

விராலிமலை அருகே உள்ள புரசம்பட்டியில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

விராலிமலை:
மீன்பிடி திருவிழா
விராலிமலை தாலுகா புரசம்பட்டி பெரியகுளத்தில் மீன்பிடி திருவிழா ஊர் சார்பாக நடத்துவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக கோவில் திருவிழா நடைபெறாமல் இருந்ததையடுத்து மீன்பிடி  திருவிழாவும் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு பருவமழை பெய்ததையொட்டி திருவிழா நடத்துவது என ஊர் முக்கியஸ்தர்கள் முடிவின்படி மீன்பிடி  திருவிழாவானது இன்று நடைபெற்றது. 
மீன்களை பிடித்து சென்றனர்
இதனை அறிந்த நம்பம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் அதிகாலையிலேயே குளத்திற்கு வந்தனர். இதனையடுத்து கிராம முக்கியஸ்தர்கள் வெள்ளை துண்டு வீசியதை தொடர்ந்து குளத்தின் கரையில் தயாராக நின்ற பொதுமக்கள் வலை, தூரி, கச்சா உள்ளிட்டவைகளை கொண்டு குளத்தில் மீன்களை பிடிக்க இறங்கினர். இதில் விரால், அயிரை, கெழுத்தி, வளனகெண்டை, குரவை உள்ளிட்ட மீன்களை கிராமமக்கள் பிடித்துச் சென்றனர். இங்கு பிடிக்கப்பட்ட மீன்களை பொதுமக்கள் விற்பனை செய்யாமல் தங்களது வீடுகளில் சமைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story