விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x
தினத்தந்தி 13 April 2022 4:38 PM GMT (Updated: 2022-04-13T22:08:57+05:30)

விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.


விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் கற்பக விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி குமாரி (வயது 45). இவரது மகன் ராமச்சந்திரன் (25). இவருடைய திருமணத்துக்காக ஜவுளி எடுக்க கடந்த 30.7.2015 அன்று ஒரு காரில் குமாரியும், ராமச்சந்திரனும் விழுப்புரம் சென்றனர்.

 அப்போது,சோழகனூரில் சென்று கொண்டிருந்த போது எதிரே  திருப்பதி நோக்கிச்சென்ற விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு சொந்தமான பஸ், கார் மீது மோதியதில் குமாரியும், ராமச்சந்திரனும் இறந்தனர்.

 இதுகுறித்து காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விபத்தில் குமாரி இறந்தது தொடர்பாக நஷ்டஈடு கேட்டு அவரது கணவர் ஆறுமுகம், விழுப்புரம் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 இதில், பாதிக்கப்பட்ட குமாரியின் குடும்பத்திற்கு விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் நஷ்ட ஈடாக ரூ.15 லட்சத்து 60 ஆயிரம் வழங்க வேண்டுமென 30.8.2019 அன்று கோர்ட்டு உத்தரவிட்டது.


ஆனால் அரசு போக்குவரத்துக்கழகம் நஷ்ட ஈடு தொகையை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததால் மனுதாரர் ஆறுமுகம் சார்பில் வக்கீல் கல்பட்டு ராஜா, 24.11.2020 அன்று நிறைவேற்று மனுதாக்கல் செய்தார்.


இம்மனுவை விசாரித்த நீதிபதி செங்கமலச்செல்வன், பாதிக்கப்பட்ட குமாரியின் குடும்பத்திற்கு அரசு போக்குவரத்துக்கழகம் வட்டியுடன் சேர்த்து ரூ.22 லட்சத்து 91 ஆயிரத்து 850-ஐ நஷ்டஈடாக வழங்க வேண்டுமெனவும், இந்த தொகையை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வழங்கவில்லையெனில் சம்பந்தப்பட்ட அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு சொந்தமான பஸ் ஜப்தி செய்யப்படும் என்று 11.2.2022 அன்று உத்தரவிட்டார். 

இருப்பினும் அரசு போக்குவரத்துக்கழகம் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் குமாரியின் குடும்பத்திற்கு நஷ்டஈடு தொகையை வழங்கவில்லை. இந்நிலையில் நேற்று விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கடலூருக்கு புறப்பட இருந்த அரசு பஸ்சை கோர்ட்டு உத்தரவின்படி முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் விஸ்வநாதன் ஜப்தி செய்தார். அப்போது மனுதாரர் ஆறுமுகம் உடனிருந்தார்.

Next Story