அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்


அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 24 April 2022 6:35 PM GMT (Updated: 24 April 2022 6:35 PM GMT)

அடிப்படை வசதிகளை செய்து தராததால் கிராமசபை கூட்டத்தில் அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ராஜபாளையம். 
அடிப்படை வசதிகளை செய்து தராததால் கிராமசபை கூட்டத்தில் அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
தெற்கு வெங்காநல்லூர் 
ராஜபாளையம் அருகே உள்ள தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா காலனியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.  ஊராட்சி தலைவர் இசக்கிராஜ் தலைமையில், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. வெங்காநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட 2, 4 மற்றும் 5-வது வார்டில் உள்ள இ.எஸ்.ஐ. நகர், லீலாவதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை சாலை, வாருகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை என பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.
மேலும் தரமான குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை எனவும், மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தில் இணைப்பு வழங்குவதற்கு, ஊராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.1500 வரை வசூல் செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. 
வாக்குவாதம் 
குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்த போது, அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி சிலர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கூறியதால் ஊராட்சி தலைவருக்கும், பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் அந்த சமயத்தில் இ.எஸ்.ஐ. நகரை சேர்ந்த சிலர் தங்களது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் குடும்ப உறுப்பினர் அட்டைகளை அதிகாரிகளிடம் வழங்க முயன்றனர். ஆனால் அவைகளை பெற்றுக் கொள்ளாத அதிகாரிகள் பொது மக்களை சமரசம் செய்தனர். பொது மக்களின் இந்த வாக்குவாதத்தால், கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 


Next Story