போலீஸ்காரரை கத்தியால் குத்திய வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
போலீஸ்காரரை கத்தியால் குத்திய வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கரூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கரூர்,
கத்திகுத்து வழக்கு
கரூர் நகர போக்குவரத்து போலீசில் பணிபுரிந்து வருபவர் இளங்கோ (வயது 44). இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் 22-ந்தேதி கரூர் பஸ் நிலையம் அருகே கோவை ரோட்டில் போக்குவரத்து போலீசாக பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நெரூர் வடபாகத்தை சேர்ந்த கூலி தொழிலாளி முரளியை (36), இளங்கோ தடுத்து நிறுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது அங்குள்ள கடைக்கு ஓடி சென்று ஒரு கத்தியை வாங்கி வந்த முரளி, இளங்கோவை கழுத்தில் குத்தி விட்டு தப்பியோடி விட்டார். இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் என்பவர் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முரளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
5 ஆண்டுகள் சிறை
இதுகுறித்த வழக்கு கரூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முழுமையாக நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கிற்கான தீர்ப்பை குற்றவியல் நீதிமன்ற நடுவர் ராஜலிங்கம் வழங்கினார்.
இதில், போலீஸ்காரரை ஆபாசமாக பேசியதற்கு 3 மாதம் சிறை தண்டனையும் ரூ.500 அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும், போலீஸ்காரரை பணி செய்ய விடாமல் தடுத்ததற்காக 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் 6 மாத சிறை தண்டனையும், கொலை முயற்சிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார். மேலும் இவை அனைத்தும் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
ஏககாலத்தில் என தீர்ப்பு வழங்கப்பட்டதால் அதிகபட்ச தண்டனையான 5 ஆண்டுகள் முரளி சிறைவாசம் அனுபவிப்பார்.
Related Tags :
Next Story