கடந்த ஆண்டைவிட மிளகாய் விளைச்சல் அமோகம்


கடந்த ஆண்டைவிட மிளகாய் விளைச்சல் அமோகம்
x

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மிளகாய் விளைச்சல் அமோகமாக கிடைத்துள்ளதோடு விலையும் கூடுதலாக கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மிளகாய் விளைச்சல் அமோகமாக கிடைத்துள்ளதோடு விலையும் கூடுதலாக கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பணப்பயிர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்த நிலையில் வைகை அணையில் இருந்தும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதன் காரணமாக அப்போது பெரும்பாலான நீர்நிலைகளில் தண்ணீர் நிறைந்தது. இந்த நீரை பயன்படுத்தி நெல்விவசாயம் நன்றாக மேற்கொண்ட விவசாயிகள் அதனை அறுவடை செய்து விற்பனை செய்து வருகின்றனர். 
இந்நிலையில் நெல் பயிருக்கு அடுத்தபடியாக இந்த மாவட்டத்தின் பணப்பயிராக கருதப்படும் மிளகாய் பயிர் இந்த ஆண்டு விளைச்சல் நன்றாக உள்ளது. முறையான நேரத்தில் நல்ல மழை பெய்ததாலும் மண்ணின் ஈரப்பதம் அதற்கேற்ற வகையில் இருந்ததாலும் இந்த ஆண்டு மிளகாய் விளைச்சல் கடந்த ஆண்டை காட்டிலும் நன்றாக உள்ளது.
மாவட்டத்தில் இந்த ஆண்டு 14 ஆயிரத்து 900 எக்டரில் மிளகாய் விவசாயம் செய்திருந்த நிலையில் ஏறத்தாழ தற்போது 13 ஆயிரம் எக்டரில் அறுவடை முடிந்துள்ளது. மீதம் உள்ள நிலங்களில் கடைசி அறுவடையை நோக்கி விவசாயிகள் சென்றுள்ளனர்.

மகசூல் நன்றாக இருந்தது

இது குறித்து மிளகாய் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் பொன்னக்கனேரி மைக்கேல் கூறியதாவது:- 
மாவட்டத்தில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக மிளகாய் விவசாயம் முக்கிய இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் மிளகாய் விதைப்பு பணி தொடங்கி ஜனவரி மாத தொடக்கத்தில் மிளகாய் பறிப்பு பணியில் ஈடுபட்டோம். கடந்த ஆண்டு காய்ப்பதற்கு முன் வளர்ந்து வரும் பருவத்தில் இருந்த மிளகாய் செடிகளுக்கு சாரல் மழை பெய்து பயன் உள்ளதாக அமைந்தது. ஆரம்பத்தில் இலைசுருட்டு புழு தோன்றிய நிலையில் பின்னர் பெய்த மழையால் பூச்சிகள் அழிந்து பயிர் நன்றாக வளர்ந்தது. இதன்காரணமாக இந்த ஆண்டு மகசூல் நன்றாக இருந்தது. 
இதுவரை தொடர்ந்து மிளகாய் பறித்து வருகிறோம். மே முதல் வாரம் வரை பறிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த ஆண்டு மிளகாய் வத்தல் விலையும் ஆரம்பத்தில் 10 கிலோ ரூ.5 ஆயிரம் வரை இருந்தது. நல்ல விலைக்கு விற்பனை செய்தோம். 
இந்த விலை படிப்படியாக குறைந்து தற்போது ரூ.3 ஆயிரத்து 500 வரை வந்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.2 ஆயிரத்து 500 விலையை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மழையும் பருவநிலையும் கைகொடுத்ததால் இந்த ஆண்டு மிளகாய் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story