பொன்னேரி அருகே ரேஷன் அரிசி ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து


பொன்னேரி அருகே ரேஷன் அரிசி ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து
x
தினத்தந்தி 30 April 2022 12:18 PM GMT (Updated: 30 April 2022 12:18 PM GMT)

பொன்னேரி அருகே ரேஷன் அரிசி ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பொன்னேரி,  

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த மெதூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான அரிசி ஆலை இயங்கி வருகிறது. இந்த அரிசி ஆலை தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கல் துறையின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நெல் அரவை செய்து அரிசியை தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு அனுப்ப வேண்டும். இந்த நிலையில் இங்கு இருந்து 50 கிலோ எடை கொண்ட 1,000 மூட்டை ரேஷன் அரிசி லாரி ஒன்றில் ஏற்றி கொண்டு நேற்று முன்தினம் இரவு அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. 

பொன்னேரியை அடுத்த பெரியகாவனம் கிராமத்தின் வழியாக பழவேற்காடு புதுவாயல் நெடுஞ்சாலை நடுவே ரெயில்வே இருப்பு பாதையை கடந்து செல்ல வேண்டிய பகுதியில் ரெயில்வே கேட் உள்ளது. 25 டன் ரேஷன் அரிசி கொண்டு சென்ற லாரி ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது ரெயில்வே கேட் மூடப்பட்டது. அப்போது திடீரென பாரம் தாங்க முடியாமல் லாரி பின்புறமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர், கிளீனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

இதனையடுத்து பொன்னேரி வருவாய் ஆர்.டி.ஓ. மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் விபத்துக்குள்ளான 1,000 மூட்டை ரேஷன் அரிசி மூட்டைகளை வேறு ஒரு லாரியில் ஏற்றி அரக்கோணத்திற்கு நள்ளிரவில் அனுப்பி வைக்கப்பட்டது.

Next Story