கூடலூர் தாலுகா ஆஸ்பத்திரியை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தி அறிவிப்பு
கூடலூர் தாலுகா அரசு ஆஸ்பத்திரி, மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கூடலூர், பந்தலூர் தாலுகா மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கூடலூர்
கூடலூர் தாலுகா அரசு ஆஸ்பத்திரி, மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கூடலூர், பந்தலூர் தாலுகா மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பொதுமக்கள் வலியுறுத்தல்
ஊட்டியில் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு தாலுகாக்களில் தலைமை அரசு ஆஸ்பத்திரிகள் உள்ளது. கூடலூரில் இருந்து ஊட்டிக்கு 52 கி.மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதேபோல் பந்தலூர் தாலுகா மக்களும் நீண்ட தொலைவிலிருந்து மருத்துவ சிகிச்சை பெற ஊட்டிக்கு செல்ல முடியாமல் உள்ளது. இதனால் அவசர மற்றும் தொடர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக பெரும்பாலான மக்கள் கேரள மாநிலத்துக்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் ஊட்டியில் மருத்துவ கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் மருத்துவக் கல்லூரியும் இயங்கி வருகிறது. இதனால் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியை கூடலூருக்கு மாற்ற வேண்டும் என 2 தாலுகா மக்களும் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
ஆஸ்பத்திரி தரம் உயர்த்தப்படும்
இதைத்தொடர்ந்து கூடலூரில் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் சில மாதங்கள் கழித்து அரசியல் காரணங்களுக்காக மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி குன்னூரில் அமைக்கப்படும் என திடீரென அறிவிக்கப்பட்டது. இதைக்கண்டித்தும், கூடலூரில் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் தமிழக சட்டசபையில் நடந்த மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கூடலூர் உள்பட 19 அரசு ஆஸ்பத்திரிகள் மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிகளாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார். இதைத்தொடர்ந்து கூடலூர், பந்தலூர் தாலுகா மக்கள் மகிழ்ச்சி அடைந்ததுடன் அரசின் உத்தரவை பாராட்டி வரவேற்று உள்ளனர். மேலும் சமூக வலைதளங்களில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மகிழ்ச்சி -பாராட்டு
இதுகுறித்து நீலகிரி மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் பழனிச்சாமி கூறும்போது, கூடலூரில் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அரசின் அறிவிப்பு குறித்து பொதுமக்கள் கூறியதாவது:- கூடலூர் பகுதி மக்கள் மருத்துவம் மட்டுமின்றி பல்வேறு தேவைகளுக்கும் ஊட்டிக்கு சென்று வர முடியாத நிலை உள்ளது. இதனால் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி கூடலூரில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு ஆஸ்பத்திரியை மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தி அறிவித்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story