வளர்ச்சி என்பதை அனைவருக்கும் சாத்தியப்படுத்துவதே திராவிட மாடல் தேனியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


வளர்ச்சி என்பதை அனைவருக்கும் சாத்தியப்படுத்துவதே திராவிட மாடல்  தேனியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 30 April 2022 1:53 PM GMT (Updated: 30 April 2022 1:53 PM GMT)

“வளர்ச்சி என்பதை அனைவருக்கும் சாத்தியப்படுத்துவதே திராவிட மாடல்” என்று தேனியில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தேனி:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தேனி மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தல் மற்றும் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தேனி அன்னஞ்சி விலக்கு அருகில் புறவழிச்சாலை பகுதியில் நடந்தது. 
விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு ரூ.114.21 கோடி மதிப்பில் முடிவுற்ற 40 திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, ரூ.74.21 கோடி மதிப்பில் 102 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் 10 ஆயிரத்து 427 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

ஓராண்டு நிறைவு
விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று வருகிற 7-ந்தேதி ஓராண்டு நிறைவடைகிறது. கொரோனா தொற்று இருந்த காரணத்தால் உடனடியாக பல மாவட்டங்களுக்கு நான் செல்ல முடியாத நிலைக்கு ஆளாக்கப்பட்டேன்.
இருந்தாலும் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று முதல் முறையாக தேனி மாவட்டத்தில் அரசு விழாவில் பங்கேற்கக்கூடிய வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த விழாவில் ரூ.71 கோடி மதிப்பில், 10 ஆயிரத்து 427 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளோம். பல துறைகளின் சார்பில் 50-க்கும் மேற்பட்ட திட்டங்களின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

திராவிட மாடல்
இது தான் ஒரு நல்ல ஆட்சியின் இலக்கணம். இது தான் மக்களுக்கான அரசு. இதைத்தான் திராவிட மாடல் அரசு என்று நாம் பெருமையோடு சொல்கிறோம். வளர்ச்சி என்பதை அனைவருக்கும் சாத்தியப்படுத்துவதே திராவிட மாடல். அதுதான் என்னுடைய மாடல். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுடைய மாடல். அது தான் திராவிட மாடல். அரசின் அனைத்து திட்ட உதவிகளும் அனைவருக்கும் சேர வேண்டும் என்கிற வகையில் ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து, பார்த்து நாம் செயல்படுத்தி கொண்டு இருக்கிறோம்.
தி.மு.க. ஆட்சியில் அனைத்து திட்டங்களும் தொய்வின்றி நடக்க வேண்டும் என்று நான் அதிகாரிகளுக்கு தொடர்ந்து அறிவுரைகள், ஆலோசனைகள் மட்டுமின்றி ஆணையும் வழங்கிக் கொண்டு இருக்கிறேன். ஒவ்வொரு தனிமனிதனின் தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே இந்த அரசின் இலக்கு. அந்த இலக்கை நோக்கிய பயணம் தான் திராவிட மாடல் என்று நாம் சொல்கிறோம்.
இன்றைக்கு 10 ஆயிரத்து 427 பேர் அரசு உதவிகள் பெற்று இருக்கிறார்கள் என்றால், இதன் மூலம் அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களும் பயன் அடைகிறார்கள். உங்கள் முகத்தில் காணக்கூடிய மகிழ்ச்சி தான் எனக்கு ஒவ்வொரு நாளும், சோர்வு இல்லாமல் உழைக்கக்கூடிய உத்வேகத்தை, ஊக்கத்தை வழங்கிக் கொண்டு இருக்கிறது.

ஏழைகளின் சிரிப்பில்...
நம்மை ஆளாக்கிய பேரறிஞர் அண்ணா அடிக்கடி சொல்வார், "ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண வேண்டும்" என்று. அது தான் எனக்கு நினைவுக்கு வருகிறது. அந்த வகையில் நலத்திட்ட உதவிகளை பெற்று நீங்கள் மகிழ்ச்சி அடையும் போது, உங்களுடைய புன்சிரிப்பில் தான் அண்ணா சொன்ன அந்த தாரக மந்திரத்தை நான் காண்கிறேன்.
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று வருகிற 7-ந்தேதி தான் ஓராண்டு நிறைவு பெறுகிறது. அதற்கு இன்னும் ஒருவார காலம் இருக்கிறது. இந்த ஓராண்டு காலத்தில் 5 ஆண்டு ஆட்சியில் இருந்தால், ஏன் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தால் என்னென்ன செய்து இருப்போமோ அதை எல்லாம் நம்முடைய அரசு செய்துள்ளது. இதை என்னால் நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியும்.
கொரோனா என்ற அந்த கொடிய நோய்க்கு ஓரளவுக்கு முற்றுப்புள்ளி வைத்தோம். தடுப்பூசி செலுத்துவதை மிகப்பெரிய மக்கள் இயக்கமாகவே மாற்றினோம். இதுவரை தமிழகத்தில் 91 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நமது ஆட்சியில் பெண்களுக்கு கட்டணமில்லாத பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் நிவாரண நிதியாக நாம் ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது. 

கொரோனா கால நிவாரணமாக 13 வகையான மளிகை பொருட்கள் தரப்பட்டது. பொங்கல் பரிசாக 22 வகையான பொருட்கள் வழங்கப்பட்டது. ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்தோம். ஆட்சி பொறுப்பேற்றவுடன் யாரும் குறைப்பதற்கு முன்பாக பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்தோம்.

வரலாற்று சாதனை

இலங்கையில் இருந்து அடைக்கலம் தேடி தமிழகத்துக்கு வந்து இருக்கக்கூடிய நம்முடைய தமிழர்களுக்கு ரூ.317 கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். நெசவாளர்கள் கோரிக்கையான பஞ்சுக்கு 1 சதவீத வரி தள்ளுபடி செய்யப்பட்டது. அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. கூட்டுறவு வங்கிகளில் 14 லட்சம் பேரின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் முழுவதையும் தள்ளுபடி செய்துள்ளோம். இப்போது மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு கடனும் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
பொதுமுடக்க கால கற்றல் இழப்பை சரிசெய்ய இல்லம் தேடி கல்வி என்ற சிறப்பான திட்டத்தை நாம் நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறோம். மருத்துவ சேவை என்பது மக்களுக்கு இன்றியமையாதது. அந்த மருத்துவ சேவையை மக்களின் இல்லத்துக்கே கொண்டு சேர்க்கும் வகையில் மக்களை தேடி மருத்துவம் என்ற ஒரு உன்னதமான திட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

சாலை விபத்துகளில் சிக்கக்கூடிய, பாதிக்கக்கூடிய விலைமதிப்பற்ற அந்த உயிர்களை காப்பாற்ற ‘இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48' என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி தொகுப்பு ரூ.61 கோடிக்கு வழங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் திறந்து விடுவதற்கு முன்பு, கால்வாய்களை முன்கூட்டியே தூர்வாரினோம். 4.9 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்து இன்றைக்கு வரலாற்று சாதனையை நாம் ஏற்படுத்தி இருக்கிறோம்.

உறுதுணையாக இருக்கும்

தமிழ்நாட்டு இளைஞர்களை பொறுத்தவரை அவர்களை கல்வியில் சிறந்தவர்களாக்க ‘நான் முதல்வன்' என்ற திட்டத்தை தொடங்கி உள்ளோம். இந்த 10 மாத காலத்தில் ரூ.64 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்க்கும் வகையில் 133 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, அதன் மூலம் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி இருக்கிறோம்.
மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.279 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 29 ஆயிரத்து 216 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு ரூ.2,567 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் உள்ளிட்ட அசையா சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவிகளின் மேல்படிப்புக்காக மாதம் ரூ.1,000 உதவித்தொகை அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் 6 லட்சம் மாணவிகள் பயனடைவார்கள். தமிழ்நாட்டு மாணவிகள் பட்டம் பெற்றவர்களாக உயர வேண்டும். அதற்கு இந்த திட்டம் உறுதுணையாக இருக்கும்.

ஏமாற்ற விரும்பவில்லை

 தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பெண்ணும் பட்டதாரியாக வேண்டும் என்பதுதான் இந்த அரசின் லட்சியம். அதற்காக தான் திராவிட இயக்கம் பல ஆண்டுகளாக போராடி வருகிறது. பெண்கள் கல்வி கற்று கொண்டாலே பழமை லோகம் இடிந்து தூள்தூளாகும். அந்த பயத்தில் தான் கல்வி கற்க பல தடைகளை உருவாக்கி இருக்கிறார்கள். அத்தனை தடைகளையும் நாம் தகர்த்தெறிவோம்.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட எல்லாவற்றையும் நிறைவேற்றி விட்டோம் என்று சொல்லி நான் உங்களை ஏமாற்ற விரும்பவில்லை. இன்னும் 5 சதவீதம், 10 சதவீதம் இருக்கிறது. அதையும் நிச்சயமாக படிப்படியாக இந்த ஸ்டாலின் நிறைவேற்றி காட்டுவான் என்பதை உறுதியோடு தெரிவிக்கிறேன்.
விமர்சனங்களுக்கு பதில்
என்னை பொறுத்தவரை என் கடன் பணிசெய்து கிடப்பதே என்ற வழித்தடத்தில் பயணிக்க நினைக்கிறேன். மக்களுக்கு பணியாற்றும் போது, மக்களுக்கு நன்மை செய்யும் போது நல்ல நோக்கத்தில் சொல்லப்படும் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ள எப்போதும் இந்த அரசும், நானும் தயாராக இருக்கிறோம். அவதூறு செய்யும் நோக்கத்தோடு, உள்நோக்கத்தோடு செய்யப்படும் விமர்சனங்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதில் சொல்லி நேரத்தை செலவிடுவதை விட நல்லது செய்வதற்கே எனக்கு இப்போது நேரம் கிடைக்கவில்லை. அதனால் கெட்டதை பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
இன்னும் சொல்ல வேண்டும் என்றால் சென்னையில் சட்டமன்றத்தில் பங்கேற்றேன். அதற்கு பிறகு காஞ்சீபுரம் மாவட்டத்தில் கிராமசபையில் பங்கேற்றேன். அதைத்தொடர்ந்து தஞ்சையில் எதிர்பாராத விபத்து நேர்ந்தது. அங்கே சென்று வந்தேன். மறைந்த 11 பேரின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் சொல்லி நிவாரண தொகை வழங்கிவிட்டு வந்தேன். மீண்டும் சட்டமன்றத்தில் பங்கேற்றேன். அதை முடித்துவிட்டு தேனி வந்து இருக்கிறேன். இந்த விழாவை முடித்துவிட்டு திண்டுக்கல்லுக்கு செல்கிறேன். அங்கு நடக்கும் நிகழ்ச்சியை முடித்துவிட்டு இரவோடு இரவாக நான் சென்னை செல்ல வேண்டும். அதற்கு பிறகு மே தின நாள், அன்று மாலையே நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் 75-ம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உழைப்பு, உழைப்பு

'கடிகாரம் ஓடும் முன் ஓடு' என்று பாவேந்தர் பாரதிதாசன் ஒரு பாடல் எழுதினார். அப்படித்தான் நான் உழைத்து கொண்டு இருக்கிறேன். நம்முடைய தலைவர் கருணாநிதியிடம் ஒரு பத்திரிகை நிருபர், 'உங்கள் மகன் ஸ்டாலினை பற்றி ஒரு வரியில் சொல்லுங்கள்' என்று ஒரு கேள்வி கேட்டார். அதற்கு கருணாநிதி, 'ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு' என்று சொன்னார். அந்த உழைப்பை கற்றுக் கொடுத்தவரே அவர் தான். அப்படி உழைப்பதற்கு எனக்கு ஊக்கம் கொடுத்தவரே அவர் தான்.
எனக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கும் அவர் தான் வழிகாட்டியாக விளங்கி கொண்டு இருக்கிறார். அவருடைய பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதியை அரசு விழாவாக நடத்திட வேண்டும் என்று சட்டமன்றத்தில் நான் அறிவித்து, எல்லா கட்சித் தலைவர்களும் அதை வரவேற்று, அதை நிறைவேற்றி தந்திருக்கிறார்கள். ஒரு தந்தையுடைய பிறந்தநாளை அரசு விழாவாக நடத்த வேண்டும் என்று அறிவிக்கிற வாய்ப்பு அவருக்கு மகனாக இருக்கக்கூடிய இந்த ஸ்டாலினுக்கு கிடைத்திருப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

நாகரிகமான அரசியல்

பா.ஜ.க. கூட இதை ஆதரித்தது. எல்லா கட்சிகளும் ஆதரித்தார்கள். ஆதரிக்காத கட்சி யார் என்று இந்த மேடையில் நான் சொல்ல விரும்பவில்லை. இந்த மேடையை நான் அரசியலாக்க விரும்பவில்லை. கருணாநிதி என்று நம் தலைவர் பெயரை குறிப்பிட்ட காரணத்தால் அவருடன் காரில் வந்த ஒருவரை இறக்கிவிட்டவர் யார் என்றால், முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். ‘எனக்கே தலைவர் கலைஞர் தான். அவர் பெயரை நீ சொல்லலாமா?' என்று கூறியவர் எம்.ஜி.ஆர். அப்படிப்பட்ட நாகரிகத்தை இன்றைக்கு இருக்கக்கூடியவர்களிடம் எதிர்பார்ப்பது என்னுடைய தவறு தான். ஆனால், இதன் மூலம் மக்களிடம் தாங்கள் யார் என்பதை அவர்கள் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
நல்லதோர் நாட்டை மட்டுமல்ல, நல்லதோர் நாகரிகமான அரசியலையும் உருவாக்க நாம் நினைக்கிறோம். அதற்கு தேவை தொலைநோக்கு பார்வையும், நல்ல எண்ணமும் தான். எனது தொலைநோக்கு பார்வை என்பது அனைத்திலும் சிறந்த தமிழ்நாடு என்ற பெயரை நாம் பெற வேண்டும். அனைத்திலும் சிறந்த தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு என்னை நான் ஒப்படைத்து செயல்படுவேன். அப்படி ஒப்படைத்து செயல்படும்போது, என்னோடு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மட்டுமல்ல, உள்ளாட்சி பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.


Next Story