குன்னத்தூர், செங்களாக்குடி முத்துமாரியம்மன் கோவில்களில் சித்திரை திருவிழா பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன்


குன்னத்தூர், செங்களாக்குடி முத்துமாரியம்மன் கோவில்களில் சித்திரை திருவிழா  பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 3 May 2022 6:46 PM GMT (Updated: 3 May 2022 6:46 PM GMT)

முத்துமாரியம்மன் கோவில்களில் சித்திரை திருவிழா நடைபெற்றது.

ஆவூர்:
விராலிமலை தாலுகா குன்னத்தூரில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் மற்றும் பிடாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த மாதம் 12-ந் தேதி காப்பு கட்டுதலுடன் சித்திரை திருவிழா தொடங்கியது. அதைத்தொடர்ந்து மண்டகப்படி உபயதாரர்களின் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்று வந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் காலை பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். விழாவின் தொடர்ச்சியாக நேற்று மாலை பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்தும் அலகு குத்தியும் மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்து முத்துமாரியம்மன் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் குழந்தை வரம் வேண்டிய பக்தர்கள் தங்களது குழந்தைகளை கரும்பு தொட்டிலில் வைத்து கோவிலை சுற்றி ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை குன்னத்தூர், பிடாரம்பட்டி கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
இதேபோல செங்களாக்குடியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் காலை பக்தர்கள் பால்குடம், காவடி, அக்னிச்சட்டி எடுத்து ஊர்வலமாக முத்துமாரியம்மன் கோவிலுக்கு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து கோவில் முன்பு கிடாவெட்டு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story