கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 5 May 2022 2:03 PM GMT (Updated: 5 May 2022 2:03 PM GMT)

நாகை மாவட்டத்தில் வருகிற 8-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

வெளிப்பாளையம்:
நாகை மாவட்டத்தில் வருகிற 8-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை)  கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. 
இதுகுறித்து நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மெகா தடுப்பூசி முகாம் 
தமிழ்நாடு முழுவதும் கோவிட்-19 கொரோனா தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த  தமிழக முதல்- அமைச்சரின் ஆணையின் படி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த  தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  கொரோனா தொற்று பரவலை முழுமையான வகையில் வெல்ல தடுப்பூசி ஒன்றே பேராயுதம் என்பதால் வருகிற 8-ந்தேதி்(ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை அனைத்து அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையம் ஆகியவை சேர்த்து ஆயிரத்து 100 சிறப்பு முகாம்களில் 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்  நடைபெற உள்ளது. 
பூஸ்டர் தடுப்பூசி
எனவே மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் மற்றும் நடக்க முடியாத நபர்களுக்கு வீட்டிற்கே சென்று தடுப்பூசி போட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது. மேலும் விடுபட்டு போன முன்களப்பணியாளர்கள், முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மற்றும் இரண்டாவது தடுப்பூசி தவணை செலுத்திக் கொள்ள உள்ள நபர்கள் தானாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். 
மேலும் 15 வயது முதல் 18 வயதுடையவர்கள் மற்றும் 12 வயது முதல் 14 வயதுடைய மாணவ, மாணவிகள் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.  ஜூன் மாதம் 2021-க்கு முன் இரண்டாவது தடுப்பூசி செலுத்திக்கொண்ட 60 வயதிற்குட்பட்டவர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள்  தவறாது பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார். 


Next Story