விழுப்புரம் மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை மின் தடையால் பொதுமக்கள் அவதி
விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக பல இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்து மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்
விழுப்புரம்
வெப்பச்சலனம்
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரித்து 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்து வருகிறது.
இந்த நிலையில் விழுப்புரத்தில் நேற்று முன்தினம் காலை முதல் மதியம் வரை வெயில் வாட்டி, வதைத்து வந்த நிலையில் இரவு 11.30 மணிக்கு மேல் திடீரென சூறாவளி காற்று வீசத்தொடங்கியது. சிறிது நேரத்தில் சாரல் மழை பெய்யத் தொடங்கியது. பின்னர் நள்ளிரவு 12 மணியளவில் இடி- மின்னலுடன் கூடிய பலத்த மழையாக பெய்ய ஆரம்பித்தது. இடைவிடாமல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்த மழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் தேங்கியது.
மின் தடை
கனமழையுடன் சூறாவளி காற்றும் வீசியதால் பல இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் நகரம் முழுவதும் மின்தடை ஏற்பட்டது. சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் விழுப்புரம் திரு.வி.க. வீதியில் உள்ள 90 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை பின்புறம் அமைந்துள்ள விநாயகர் கோவிலின் பழமைவாய்ந்த அரச மரத்தின் கிளைகள் முறிந்து அவ்வழியாக வந்த ஆட்டோ மீதும் மற்றும் அருகில் இருந்த மின்மாற்றி மீதும் விழுந்தது. இதன் காரணமாக மின் கம்பிகள் துண்டிக்கப்பட்டு மின் தடை ஏற்பட்டது. ஆட்டோ டிரைவர் மற்றும் அதிலிருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதேபோல் விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் இருந்த மரத்தின் கிளைகள் முறிந்து விழுந்ததில் அருகில் உள்ள மதில்சுவர் இடிந்து சேதமடைந்தது.
வாழை மரங்கள் சேதம்
மேலும் விழுப்புரம் சுற்றுவட்டார கிராமங்களான பிடாகம், பில்லூர், ஆனாங்கூர், மரகதபுரம், கோலியனூர், சாலையாம்பாளையம், வளவனூர், நன்னாடு, தோகைப்பாடி, பெரும்பாக்கம், காணை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. பல இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்ததில் பல்வேறு கிராமங்களிலும் நள்ளிரவு முழுவதும் மின் தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் நிம்மதியாக தூங்க முடியாமல் கொசுத்தொல்லையால் மிகவும் அவதிப்பட்டனர். சூறாவளி காற்றினால் நன்னாடு, காணை உள்ளிட்ட சுற்றியுள்ள கிராமப்புறங்களில் பயிர் செய்யப்பட்டிருந்த வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.
இதேபோல் விக்கிரவாண்டி, செஞ்சி, மேல்மலையனூர், திருவெண்ணெய்நல்லூர், மயிலம், வானூர், கோட்டக்குப்பம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் நள்ளிரவில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இந்த மழை நேற்று அதிகாலை வரை விட்டுவிட்டு தூறிக்கொண்டே இருந்தது.
மின்கம்பிகளை சீரமைக்கும் பணி
மழை ஓய்ந்த பின்னர் நேற்று காலை முதல் அறுந்து கிடந்த மின் கம்பிகளை சீரமைத்து மின்சார வினியோகம் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். கடந்த சில வாரங்களாக கோடை வெயில், பொதுமக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ததால் பொதுமக்கள் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.
மழை அளவு
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
மணம்பூண்டி...........................36
நேமூர்..........................................32
வல்லம்.........................................31
முண்டியம்பாக்கம்............25.80
வளத்தி.........................................16
முகையூர்.....................................15
விழுப்புரம்..................................13
செஞ்சி.........................................13
அனந்தபுரம்..............................12
கஞ்சனூர்....................................10
Related Tags :
Next Story