தமிழக அரசின் ஓராண்டு சாதனை மலர் கலெக்டர் விஷ்ணு வெளியிட்டார்
தமிழக அரசின் ஓராண்டு சாதனை மலரை கலெக்டர் விஷ்ணு வெளியிட்டார்.
நெல்லை:
சாதனை மலர்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தயார் செய்யப்பட்ட ‘‘ஓயா உழைப்பின் ஓராண்டு சாதனை மலரை’’ நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் விஷ்ணு நேற்று வெளியிட்டார். அதனை மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் பெற்றுக் கொண்டார்.
பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை மாவட்ட திட்டங்கள்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மே மாதம் 7-ந்தேதி முதல்-அமைச்சராக பதவி ஏற்றார். கடந்த ஓராண்டில் நெல்லை மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி உள்ளார்.
சட்டசபையில், நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் ரூ.15 கோடியில் அமைக்கப்படும் எனவும், வ.உ.சி. 150-வது பிறந்த நாளையொட்டி நெல்லை சந்திப்பு ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.05 கோடியில் நுழைவு வாசல் அமைக்கப்படும், வ.உ.சி. வாழ்க்கை வரலாறை குறிக்கும் வகையில் ஒலி-ஒளி கண்காட்சி அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். வள்ளியூரில் அரசு தலைமை ஆஸ்பத்திரி அமைக்கப்படும் எனவும், ரூ.5 கோடி மதிப்பில் கலர் மீன்கள் வளர்ப்பு, கண்காட்சி அமைக்கப்படும் எனவும் சட்டசபையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மகளிர் இலவச பயண திட்டம்
மகளிருக்கு இலவச பஸ் பயண திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 2 கோடியே 11 லட்சத்து 13 ஆயிரத்து 101 பெண்கள் இலவசமாக பயணம் செய்து உள்ளனர். உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் 53 ஆயிரத்து 695 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, 48 ஆயிரத்து 262 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. 3 ஆயிரத்து 918 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டு உள்ளது. கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் ரத்து திட்டத்தின் கீழ் 33 ஆயரத்து 503 பேருக்கு 40 கிலோ தங்க நகைக்கடன் ரூ.101 கோடி மதிப்பில் தள்ளுபடி செய்யப்பட்டது.
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.56 கோடி கடன் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நோயாளிகள் வீடுகளுக்கு சென்று மருத்துவ சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 87 ஆயிரத்து 226 பேர் பயன் அடைந்துள்ளனர். இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.7 கோடி செலவில் 944 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளது.
நெல்லை நீர்வளம்
நெல்லை நீர்வளம் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள 1,200-க்கும் மேற்பட்ட குளங்கள், தாமிரபரணி நதியின் வழித்தடத்தை புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தாமிரபரணி ஆற்றில் 62 கிலோ மீட்டர் தூரம் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. காணி இன மக்கள் உற்பத்தி செய்யும் 40 வகையான பொருட்களுக்கு மாவட்ட நிர்வாகத்தால் இயற்கை வேளாண் சான்றிதழ் பெறப்பட்டு உள்ளது. இது போல் நெல்லை மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, மாவட்ட வருவாய் அலுவலர் (ஒழுங்கு நடவடிக்கை ஆணையர்) சுகன்யா, ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி டீன் ரவிச்சந்திரன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெய அருள்பதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story