ஒலல்கெரே அருகே தங்கும் விடுதி கழிவறைக்குள் ரகசிய அறை அமைத்து விபசாரம்; 3 பேர் கைது


ஒலல்கெரே அருகே தங்கும் விடுதி கழிவறைக்குள் ரகசிய அறை அமைத்து விபசாரம்; 3 பேர் கைது
x
தினத்தந்தி 8 May 2022 4:09 PM GMT (Updated: 8 May 2022 4:09 PM GMT)

ஒலல்கெரே அருகே தங்கும் விடுதி கழிவறைக்குள் ரகசிய அறை அமைத்து விபசாரம் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் வடமாநில பெண் மீட்கப்பட்டார்

சிக்கமகளூரு: ஒலல்கெரே அருகே தங்கும் விடுதி கழிவறைக்குள் ரகசிய அறை அமைத்து விபசாரம் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் வடமாநில பெண் மீட்கப்பட்டார்.
 
தங்கும் விடுதி கழிவறையில்...

சித்ரதுர்கா மாவட்டம் ஒலல்கெரே டவுன் பகுதியில் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இந்த தங்கும் விடுதியில் விபசாரம் நடப்பதாக போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் ஒலல்கெரே போலீசார் தங்கும் விடுதிக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர்.  தங்கும் விடுதி அறைகளில் முதலில் சோதனை நடத்தியபோது விபசாரம் நடந்ததற்கான ஆதாரம் கிடைக்கவில்லை. 
இதற்கிடையே போலீசார், தங்கும் விடுதி கழிவறைக்குள் சென்று பார்த்தனர். 

அப்போது கழிவறையின் சுவரில் சந்தேகப்படும்படியாக டைல்ஸ் பதிக்கப்பட்டது போன்ற மூடி இருப்பதை போலீசார் கண்டுப்பிடித்தனர். இதையடுத்து போலீசார் அந்த மூடியை திறந்து பார்த்தனர். 
 
3 பேர் கைது

அப்போது கழிவறைக்குள் ரகசியமாக ஒரு அறை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரகசிய அறைக்குள் சென்று பார்த்தனர். அப்போது அந்த அறையில் இளம்பெண்ணும், ஆண் ஒருவரும் விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அந்த அறையில் கட்டில், மின்விசிறி, ஏ.சி. உள்ளிட்ட வசதிகள் இருந்தது. இதையடுத்து இளம்பெண்ணை போலீசார் மீட்டனர். மேலும் அவருடன் இருந்த நபர் மற்றும் தங்கும் விடுதி ஊழியர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

இதுபற்றி அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் மைசூருவை சேர்ந்த தங்கும் விடுதி உரிமையாளர் பணத்தாசை காட்டி வடமாநில இளம்பெண்களை அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளார். கடந்த ஓராண்டாக யாருக்கும் தெரியாமல் தங்கும் விடுதி கழிவறையில் ரகசிய அறை அமைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. 
 
வலைவீச்சு

அதேநேரத்தில் மீட்கப்பட்ட பெண் அருணாச்சலபிரதேசத்ைத சேர்ந்தவர் என்பதும், கைதானவர்கள் வாடிக்கையாளர் மற்றும் தங்கும் விடுதியின் ஊழியர்கள் 2 பேர் என்பதும் தெரியவந்தது. தங்கும் விடுதி உரிமையாளர் உள்பட மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதால் கைதானவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீசார் ெதரிவிக்கவில்லை.

 இதுகுறித்து ஒலல்கெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து உரிமையாளரை வலைவீசி தேடிவருகின்றனர்.
==========================


Next Story