குழந்தை திருமணம் செய்து வைத்தால் சிறை தண்டனை கலெக்டர் அரவிந்த் எச்சரிக்கை


குழந்தை திருமணம் செய்து வைத்தால்  சிறை தண்டனை கலெக்டர் அரவிந்த் எச்சரிக்கை
x
தினத்தந்தி 10 May 2022 6:13 PM GMT (Updated: 10 May 2022 6:13 PM GMT)

குமரி மாவட்டத்தில் குழந்தை திருமணம் செய்து வைத்தால் சிறை தண்டனை வழங்கப்படும் என்று கலெக்டர் அரவிந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாகர்கோவில், 
குமரி மாவட்டத்தில் குழந்தை திருமணம் செய்து வைத்தால் சிறை தண்டனை வழங்கப்படும் என்று கலெக்டர் அரவிந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குழந்தை திருமணம்
குமரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் 5 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. குழந்தை திருமண தடுப்புச்சட்டம் 2006-ன் படி 18 வயது நிறைவடையாத பெண்ணுக்கும், 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் செய்யப்படும் திருமணங்கள் செல்லாது. அதுசட்டப்படி குற்றம் ஆகும். 
இந்த சட்டத்தின்படி குழந்தை திருமணம் செய்யும் மணமகன், குழந்தை திருமணத்தை முன்னின்று நடத்துபவர்கள் அல்லது வழிகாட்டுபவர்கள், அர்ச்சகர், பெண் குழந்தைக்கு பொறுப்பாக உள்ள பெற்றோர் அல்லது பாதுகாவலர், குழந்தை திருமணத்தில் கலந்து கொள்பவர்கள், அனுமதி அளித்தவர்கள், பங்கேற்றவர்கள் மற்றும் தடுக்க தவறியவர்கள் அனைவரும் குற்றவாளி ஆவார்கள்.
எனவே இதுபோன்ற குற்றம் புரிந்தவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
புகார் அளிக்கலாம்
குழந்தை திருமணம் பற்றி அறிந்தால் 1098 (அல்லது) 181 என்ற எண்ணில் புகார் செய்யலாம். தகவல் அளித்தவரின் விவரங்கள் பாதுகாக்கப்படும். அத்துடன் போலீஸ்துறை, கிராம நிர்வாக அதிகாரி, கல்வித்துறை ஆகியோருடனும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குழந்தையை மீட்டு மனமாற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும்.
குழந்தை திருமண தடுப்புச்சட்ட விதிகள்படி மாவட்ட சமூகநல அலுவலர் குழந்தை திருமண தடுப்பு அலுவலராக உள்ளார். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலர், குழந்தை திருமண தடுப்பு அலுவலர், மாவட்ட கலெக்டர் அலுவலக இணைப்பு கட்டிடம் கீழ்தளம், நாகர்கோவில். தொலைபேசி எண்-04652-278404 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story