சாய்ந்து ஆபத்தான நிலையில் காணப்படும் மின்கம்பங்கள்


சாய்ந்து ஆபத்தான நிலையில் காணப்படும் மின்கம்பங்கள்
x
தினத்தந்தி 11 May 2022 4:44 PM IST (Updated: 11 May 2022 4:44 PM IST)
t-max-icont-min-icon

பண்டாரவடை ஊராட்சியில் சாய்ந்து ஆபத்தான நிலையில் மின்கம்பங்கள் காணப்படுகிறது. இதை அதிகாரிகள் கவனித்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திட்டச்சேரி;
பண்டாரவடை ஊராட்சியில் சாய்ந்து ஆபத்தான நிலையில் மின்கம்பங்கள் காணப்படுகிறது. இதை அதிகாரிகள் கவனித்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆபத்தான மின்கம்பங்கள்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பண்டாரவடை ஊராட்சியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். திருமருகலில் இருந்து மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு பண்டாரவடை ஊராட்சி பகுதிகளான பண்டாரவடை, ஆதினங்குடி, தென்பிடாகை உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மேற்கண்ட பகுதிகளில் உள்ள மின்கம்பங்கள் சேதமடைந்து சாய்ந்த நிலையிலும், மின் கம்பிகள் தாழ்வாகவும் செல்கிறது.இதனால் காற்று வேகமாக வீசும் நேரங்களில் மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பொறிகள் பறந்து வீடுகள் மற்றும் வயல்களில் விழுந்து தீவிபத்துகள் ஏற்படுத்துகிறது. 
தீவிபத்து ஏற்படும் அபாயம்
மேலும் மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி கொள்வதால் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் சாலைகளில் செல்லும் வாகனங்கள் மீது உரசி தீவிபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். வயலில் சாய்ந்த நிலையில் மின்கம்பம் உள்ளதால் விவசாய பணிகளில் ஈடுபட விவசாயிகள் அச்சப்படுகின்றனர். 
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  இதை கவனித்து பண்டாரவடை ஊராட்சியில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story