தூத்துக்குடியில் அரசு பஸ் கண்ணாடியை கல் வீசி உடைத்த கும்பல்


தூத்துக்குடியில் அரசு பஸ் கண்ணாடியை கல் வீசி உடைத்த கும்பல்
x
தினத்தந்தி 11 May 2022 11:17 AM GMT (Updated: 2022-05-11T16:47:58+05:30)

தூத்துக்குடியில் அரசு பஸ் கண்ணாடியை கல் வீசி உடைத்த 5 பேர் கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் அரசு பஸ் கண்ணாடியை கல்வீசி உடைத்த 5 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அரசு பஸ்
தூத்துக்குடியில் இருந்து நெல்லை நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டு இருந்தது. இந்த பஸ்சை குறுக்குச்சாலை சிந்தலக்கட்டையை சேர்ந்த ஜெயராஜ் (52) என்பவர் ஓட்டி வந்தார். பஸ் தூத்துக்குடி 3-வது மைல் பஸ் நிறுத்தத்தில் நின்ற போது, 5 பேர் குடிபோதையில் பஸ்சில் ஏறி உள்ளனர். தொடர்ந்து அவர்கள் பஸ்சில் அவதூறான வார்த்தைகளால் சத்தமாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் கண்டக்டர், இந்திய உணவுக்கழக குடோன் அருகே பஸ் சென்றபோது பஸ்சை நிறுத்தி உள்ளார். அதன்பிறகு குடிபோதையில் இருந்த 5 பேரையும் பஸ்சில் இருந்து கீழே இறக்கி விட்டாராம். மீண்டும் பஸ் புறப்பட்ட போது, பஸ்சில் இருந்து இறக்கி விட்டதால் ஆத்திரம் அடைந்த அவர்கள் கீழே கிடந்த கல்லை தூக்கி வீசி பஸ்சின் பின்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு தப்பி சென்று விட்டனர். சேதம் அடைந்த கண்ணாடியின் மதிப்பு ரூ.6 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
5 பேருக்கு வலைவீச்சு
இதனால் அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர் ஜெயராஜ், தூத்துக்குடி தென்பாகம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வனிதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற 5 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story