குளு குளு காற்றுடன் குளிர் பிரதேசமான திருப்பூர்


குளு குளு காற்றுடன் குளிர் பிரதேசமான திருப்பூர்
x
தினத்தந்தி 11 May 2022 1:52 PM GMT (Updated: 11 May 2022 1:52 PM GMT)

குளு குளு காற்றுடன் குளிர் பிரதேசமான திருப்பூர்

திருப்பூர்
கத்தரி வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் திருப்பூரில் கடந்த இரண்டு தினங்களாக வெயில் இன்றி குளு, குளு காற்றுடன் இதமான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. 
சுட்டெரித்த வெயில்
திருப்பூரில் கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் கத்தரி வெயிலும் தொடங்கி விட்டதால் கடந்த சில தினங்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். வழக்கமாக வெயிலுக்கு வயதானவர்கள், பெண்கள் குடைபிடித்து செல்லும் நிலையில் திருப்பூர் மாநகர பகுதியில் வாலிபர்களுக்கும் வெயிலுக்கு குடை பிடித்து சென்றதை பார்க்க முடிந்தது. வெயிலின் தாக்கத்தை தணித்து கொள்வதற்காக பொதுமக்கள் இளநீர், மோர், எலுமிச்சை சாறு, கம்பங்கூழ், பழரசம் ஆகியவற்றை அருந்தினர். இதனால் இவற்றின் விற்பனை அதிகமாக இருந்தது. இதேபோல் தர்பூசணி, நுங்கு, பதநீர் ஆகியவற்றின் விற்பனையும் அதிக அளவில் இருந்தது. இப்படிப்பட்ட நிலையில் திருப்பூரில் இடையிடையே மழை பெய்த வந்ததால் திருப்பூர் மக்களுக்கு சுட்டெரித்த வெயிலில் இருந்து சற்று ஓய்வு கிடைத்தது.
எட்டிப்பார்க்காத சூரியன்
இப்படிப்பட்ட நிலையில் இது கத்தரி வெயில் காலம் தானா என சந்தேகம் கொள்ளும் அளவிற்கு திருப்பூரின் சீதோஷ்ண நிலை தலைகீழாக மாறியுள்ளது. காரணம் கடந்த 2 தினங்களாக சூரியனே தெரியவில்லை. தொடர்ச்சியாக 2 நாட்கள் வெயில் இல்லாத காரணத்தால் திருப்பூரில் காலை முதல் இரவு வரை தொடர்ச்சியாக குளு, குளுவென குளிர் காற்று வீசி வருகிறது. இதனால் தற்போது திருப்பூர் குளிர் பிரதேசம் போல மாறியுள்ளது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு செல்லாமல் அங்கு நிலவும் இதமான வானிலையை பயண செலவு இன்றி, இங்கிருந்தவாறே அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் திருப்பூர் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கிடைத்த வரைக்கும் லாபம் என இந்த ரம்மியமான சீதோஷ்ண நிலையை பொதுமக்கள் ரசித்து வருகின்றனர். குறிப்பிட்டு சொல்வதென்றால்  இரவு நேரத்தில் ஆடைகளை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்து விட்டு மின்விசிறியை வேகமாக சுழல விட்டவர்கள் தற்போது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை போர்வையை போர்த்திக்கொண்டு தூங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஜில் தண்ணீர்
இதேபோல் வெயில் அதிகம் இருந்த நேரத்தில் மதிய வேளையில் தண்ணீர் குழாய்களில் தண்ணீர் கொதிக்க வைத்த வெந்நீர் போன்று வந்தது. ஆனால் கடந்த இரண்டு தினங்களாக தொடர்ச்சியாக குளிர் காற்று வீசி வருவதால் தற்போது குழாய்களில் தண்ணீர் ‘ஜில்’லென்று வருகிறது. மேலும் வெயிலுக்கு பொதுமக்கள் குடை பிடித்து சென்ற நிலையில் தற்போது குடைகளுக்கு ஓய்வு கிடைத்துள்ளது. ஒரு சிலர் குளிருக்கு இதமாக ஜெர்கின், ஸ்ெவட்டர், மப்ளர் உள்ளிட்ட குளிர்கால ஆடைகளை அணிந்து சென்று வருகின்றனர். தற்போது 10 முதல் பிளஸ்2 வரை உள்ள வகுப்பிற்கு பொது தேர்வு நடந்து வருவதால் தற்போது நிலவும் இதமான வானிலை மாணவ, மாணவிகளுக்கும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

Next Story