தேர்வில் முறைகேடு ருத்ரேகவுடாவை காவலில் எடுத்து பெங்களூரு போலீஸ் விசாரணை


தேர்வில் முறைகேடு ருத்ரேகவுடாவை காவலில் எடுத்து பெங்களூரு போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 11 May 2022 3:05 PM GMT (Updated: 2022-05-11T20:35:59+05:30)

பொதுப்பணித்துறை என்ஜினீயர் பணிகளுக்கான தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக ருத்ரேகவுடாவை பெங்களூரு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூரு:

ருத்ரேகவுடா கைது

  கர்நாடகத்தில் 545 சப்-இன்ஸ்பெக்டா் பணிகளுக்கான தேர்வில் நடந்த முறைகேடு குறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த முறைகேட்டில் மூளையாக செயல்பட்டதாக கலபுரகியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரான ருத்ரேகவுடா பட்டீலை கடந்த 2 வாரத்திற்கு முன்பு போலீசார் கைது செய்திருந்தார்கள். விசாரணையில், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதியவர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை ருத்ரேகவுடா வாங்கியது தெரியவந்தது.

  அவரது வங்கி லாக்கரில் இருந்து 500 கிராம் தங்க நகைகள், ரூ.38 லட்சம் ரொக்கம் மற்றும் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. இதற்கிடையில், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு போன்று, பொதுப்பணித்துறையில் என்ஜினீயர் பணிகளுக்காக நடந்த தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதில் ருத்ரேகவுடாவுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

பொதுப்பணித்துறை தேர்விலும்...

  அதாவது கடந்த ஆண்டு(2021) டிசம்பர் மாதம் பொதுப்பணித்துறை என்ஜினீயர் பணி இடங்களுக்காக தேர்வு நடந்திருந்தது. பெங்களூரு அன்னபூர்னேஷ்வரிநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒரு சிலரை கைது செய்திருந்தாா்கள். கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் தான் ருத்ரேகவுடாவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

  இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் சி.ஐ.டி. போலீசார் வசம் இருக்கும் ருத்ரேகவுடா தங்களது காவலில் எடுத்து விசாரிக்க அன்னபூர்னேஷ்வரிநகர் போலீசார் முடிவு செய்தார்கள். அத்துடன் ருத்ரேகவுடாவிடம் விசாரணை நடத்த அனுமதி கேட்டு கலபுரகி கோர்ட்டில் அன்னபூர்னேஷ்வரிநகர் போலீசார் மனு தாக்கல் செய்தார்கள்.அந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி, ருத்ரேகவுடாவிடம் அன்னபூர்னேஷ்வரிநகர் போலீசார் விசாரிக்க அனுமதி வழங்கி உத்தர விட்டார்.

காவலில் எடுத்து விசாரணை

  அதைத்தொடர்ந்து, கலபுரகியில் இருந்து நேற்று காலையில் ருத்ரேகவுடாவை பலத்த பாதுகாப்புடன் போலீசார் பெங்களூருவுக்கு அழைத்து வந்தனர். அவருக்கு மருத்துவ பரிசோதனை முடிந்ததும், நீதிபதி முன்னிலையில் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது ருத்ரேகவுடாவை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிபதியிடம் போலீஸ் தரப்பில் கேட்கப்பட்டது. அப்போது 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு, நீதிபதி அனுமதி வழங்கினார்.

  இதையடுத்து, ருத்ரேகவுடாவிடம் அன்னபூர்னேஷ்வரிநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பொதுப்பணித்துறை என்ஜினீயர்களுக்கான தேர்விலும் ப்ளூடூத் பயன்படுத்தி சிலர் தேர்வு எழுதியதாகவும், இதற்கு தேவையான உதவிகளை ருத்ரேகவுடா செய்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதுகுறித்தும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story