ஹைவேவிஸ் மலைப்பகுதியில் பாதுகாப்பற்ற சுற்றுலா
ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள மகாராஜா மெட்டில் பாதுகாப்பற்ற முறையில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் அதே நேரத்தில் பாதுகாப்பு குறைபாடு உள்ளது.
தேனி:
ஹைவேவிஸ் மலைப்பகுதி
தேனி மாவட்டத்தில் ஹைவேவிஸ் மலைப்பகுதியானது இயற்கை எழில் கொஞ்சும் இடமாக திகழ்கிறது. அங்கு திரும்பி பார்க்கும் திசை எங்கும் பச்சைப் பசேல் என தேயிலைத் தோட்டங்கள் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.
தற்போது கோடை காலத்திலும் குளு, குளுவென சீசன் நிலவுகிறது. இதனால், ஹைவேவிஸ் மலைப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.
இங்குள்ள தேயிலை தோட்டங்கள், ஹைவேவிஸ் அணை, மணலாறு அணை, இரவங்கலாறு அணை போன்றவற்றை பார்த்து ரசிக்கின்றனர். இந்த மலைப்பகுதியின் முக்கிய இடங்களில் ஒன்றாக மகாராஜா மெட்டு உள்ளது.
உயரமான இந்த பகுதிக்கு தேயிலைத் தோட்டம் வழியாக நடந்து மலை உச்சிக்கு செல்ல வேண்டும். அந்த மலை உச்சியில் இருந்து பார்த்தால் கம்பம், கூடலூர், லோயர்கேம்ப், சின்னமனூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களை பார்த்து ரசிக்கலாம்.
வன விலங்குகள் நடமாட்டம்
இங்கு வன விலங்குகளும் உலா வரும் என்பதால், அதை ரசிக்கவும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். மகாராஜா மெட்டுக்கு செல்வதற்கு வனத்துறை சார்பில் ஒரு நபருக்கு ரூ.30 வீதம் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதேநேரத்தில் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவுமில்லை. அந்த மலைப்பகுதியில் இயற்கை அழகு எந்த அளவுக்கு கொட்டிக் கிடக்கிறதோ அதேபோன்று ஆபத்துகளும் உள்ளன.
குறிப்பாக மகாராஜா மெட்டு பகுதியில் சிறுத்தை, புலி, யானை, காட்டெருமை போன்ற வன விலங்குகள் அடிக்கடி உலா வரும். ஆனால், மகாராஜா மெட்டு பகுதியில் வனத்துறையினர் போதிய அளவில் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவது இல்லை.
பாதுகாப்பு குறைபாடு
இதனால், சுற்றுலா பயணிகள் ஆபத்தான மலைப்பகுதியில் இறங்கி சென்று புகைப்படம் எடுப்பதும், வன விலங்குகளை பார்த்தால் அதன் அருகில் செல்ல முயற்சிப்பதும் நடக்கிறது. நேற்று இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குழந்தைகளுடன் குவிந்தனர்.
ஆனால், தேயிலைத் தோட்டம் அருகில் நுழைவுக் கட்டணம் வசூல் செய்யப்பட்ட அதே நேரத்தில் பாதுகாப்பு பணிக்கு யாரும் இல்லை. எனவே, இந்த மலைப்பகுதி பாதுகாப்பாற்ற சுற்றலா இடமாக மாறி வருகிறது.
இதே நிலை நீடித்தால் செல்பி மோகத்தில் யாரேனும் பள்ளத்தாக்கில் விழுந்தோ, அல்லது வன விலங்குகளிடம் சிக்கிக் கொள்ளும் அபாயமாக நிகழ வாய்ப்புள்ளது.
எனவே, மகாராஜா மெட்டு பகுதியில் காலை முதல் மாலை வரை நிரந்தர கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்வதற்கு வனத்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Related Tags :
Next Story