வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
கள்ளக்குறிச்சி அருகே வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புதுறை சார்பில் கால்நடைகளுக்கு மடிநோய், செயற்கை கருவுற்றல் மற்றும் குடற்புழு நீக்கம் மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமை கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பின்னர் அங்கு நடந்த சிறப்பு முகாமில் கலெக்டர் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
தொடர்ந்து வேளாண் பொறியியல் துறை சார்பில் ரூ.3 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் விவசாயி ஒருவரது நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள சோலார் மின் மோட்டாரை பார்வையிட்டதோடு, .ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
தொடர்ந்து பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் ரூ.13 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பில் புத்தேரிக்குளம் சீரமக்கும் பணியை ஆய்வு செய்தார்.
தரிசு நிலங்கள்
அப்போது பணியை நல்ல தரத்துடன் விரைந்து முடிக்க வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஆலத்தூர் கிராமத்தில் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டுவரும் நோக்கில் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட 35 ஏக்கர் தரிசு நிலத்தொகுப்பில் முட்செடிகளைஅகற்றும் பணியை கலெக்டர் பார்வையிட்டார். அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, வேளாண் இணை இயக்குனர் வேல்விழி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் மனோகரன், வேளாண் துணை இயக்குனர் சுந்தரம், கள்ளக்குறிச்சி ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம், வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) நடராஜன், வேளாண்மை அலுவலர் விஜயலட்சுமி, ஆலத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் மல்லிகா லோகநாதன் உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story