விருதுநகர் புதிய பஸ்நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை


விருதுநகர் புதிய பஸ்நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை
x
தினத்தந்தி 11 May 2022 7:41 PM GMT (Updated: 2022-05-12T01:11:23+05:30)

விருதுநகர் புதிய பஸ்நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர், 
விருதுநகர் புதிய பஸ்நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. 
புதிய பஸ் நிலையம்
விருதுநகர் புதிய பஸ் நிலையத்திற்கு விருதுநகர் நகராட்சித்தலைவராக சொக்கர் இருந்த போது அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார். உலக வங்கி நிதி உதவியுடன் கட்டப்பட்ட இந்த புதிய பஸ் நிலையத்தை ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அமைச்சர்களாக இருந்த செங்கோட்டையன், திருநாவுக்கரசு மற்றும் கண்ணப்பன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
 புதிய பஸ் நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்டப்பட்டது. புதிய பஸ் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை முழுமையாக பயன்பாட்டிற்கு வராத நிலை நீடிக்கிறது. இதற்கிடையில் கலெக்டர்கள் பலர் அவ்வப்போது நடவடிக்கை எடுத்தும் பலன் தராத நிலையே உள்ளது.
போக்குவரத்து கழக பணிமனை
 இதற்கிடையில் கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தின் போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த கே.என். நேரு விருதுநகர்-மதுரை ரோட்டில் உள்ள போக்குவரத்து கழக பணிமனையை பஸ் நிலையமாக்கி விட்டு, புதிய பஸ் நிலையத்தில் போக்குவரத்து கழக பணிமனையை மாற்றி விடலாம் என்று ஆலோசனை தரப்பட்டது. ஆனால் அதுவும் கைகூடவில்லை.
நகரசபைத்தலைவராக கார்த்திகா கரிக்கோல்ராஜ் இருந்தபோது நகருக்கு வடபுரம் நெடுந்தூர பஸ்களுக்கான பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கருத்துக் கூறப்பட்டது. ஆனாலும் அதுவும் நடைமுறைப்படுத்தப்படாமல் போனது.  இதுவரை இந்த பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வராமல் காட்சி பொருளாகவே உள்ளது.
வலியுறுத்தல் 
 இந்நிலையில் சமீபத்தில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் இதனை பயன்பாட்டுக்கு கொண்டுவர ஆய்வு மேற்கொண்டனர். மேலும் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர்.
 ஆனாலும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத நிலை நீடிக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் புதிய பஸ் நிலையத்தினை பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும், நெடுந்தூர பஸ்கள் நகருக்குள் வந்து செல்லவும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story