குடோன்களில் பதுக்கி வைத்திருந்த 10 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


குடோன்களில் பதுக்கி வைத்திருந்த 10 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 12 May 2022 1:32 AM IST (Updated: 12 May 2022 1:32 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் குடோன்களில் பதுக்கி வைத்திருந்த 10 டன் பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து குடோன்களுக்கு சீல் வைத்தனர். மேலும் அதன் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.

கும்பகோணம்:
கும்பகோணத்தில் குடோன்களில் பதுக்கி வைத்திருந்த 10 டன் பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து குடோன்களுக்கு சீல் வைத்தனர். மேலும் அதன் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.
ஆய்வு 
கும்பகோணம் அண்ணலக்ரஹாரம் பகுதியில் உள்ள 2 குடோன்களில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் டன் கணக்கில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மாநகர நகர் நல அலுவலர் பிரேமாவுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நகர் நல அலுவலர் பிரேமா தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மணிகண்டன், பாலசுப்பிரமணியன் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்கள், மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் சசிகுமார், முத்தையா உள்ளிட்டோர் அண்ணலக்ரஹாரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். 
அப்போது கும்பகோணம் அரசினர் பெண்கள் கல்லூரி பின்புறம் உள்ள 2 குடோன்களில் 10 டன் எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைத்து, விற்பனை செய்வது தெரியவந்தது. 
குடோனுக்கு சீல் 
இதையடுத்து அந்த குடோன்களில் இருந்து 10 டன் எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களை நகர் நல அலுவலர் தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்து, 2 குடோன்களையும் பூட்டி சீல் வைத்தனர். மேலும் பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருந்த 2 குடோன்களின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர். இதுகுறித்து நகர்நல அலுவலர் பிரேமா கூறுகையில், தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கு முற்றிலுமாக தடை விதித்துள்ளது. இந்த நிலையில் கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக தகவல்கள் கிடைத்து வருகிறது. அதன்படி அதிகாரிகள் அடங்கிய குழுவினர் அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொண்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறோம். 
சட்டப்படி நடவடிக்கை 
அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்தாலும் அல்லது பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டாலும் அபராதம் விதிப்பதுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். 

Next Story