உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு: பெரியார் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியர் மீது வழக்கு


உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு: பெரியார் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியர் மீது வழக்கு
x
தினத்தந்தி 11 May 2022 8:28 PM GMT (Updated: 2022-05-12T01:58:18+05:30)

உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்தது தொடர்பாக சேலம் பெரியார் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்,
முறைகேடு
சேலம் கருப்பூரில் இயங்கும் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 11-வது திட்ட வளர்ச்சி பணிக்காக கடந்த 2010-ம் ஆண்டு டெல்லியில் உள்ள பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதில் கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக சுமார் ரூ.7 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் குளிர்சாதன பெட்டி, ஸ்டூடியோ அமைப்பது மற்றும் உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் ரூ.4 லட்சத்து 45 ஆயிரத்து 456 முறைகேடு நடந்திருப்பது அதிகாரிகள் தணிக்கையில் தெரியவந்தது. மேலும் இந்த முறைகேட்டில் இதழியல் துறை பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற நடராஜன் என்பவருக்கு தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வழக்குப்பதிவு
அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணராஜன், உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்தது தொடர்பாக பெரியார் பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியர் நடராஜன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story