உடையார்பாளையம் அருகே இருதரப்பினர் இடையே தகராறு; மாரியம்மன் கோவிலை பூட்டிய அதிகாரிகள்
உடையார்பாளையம் அருகே இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டதால் மாரியம்மன் கோவிலை அதிகாரிகள் பூட்டினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடையார்பாளையம்,
இருதரப்பினர் இடையே தகராறு
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள தத்தனூர் பொட்டக்கொல்லை கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாமி கும்பிட அதே கிராமத்தை சேர்ந்த இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து, உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. பரிமளம் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, சுமூகமாக சாமி கும்பிட இருதரப்பினரையும் அறிவுறுத்தினார். இதனைதொடர்ந்து கடந்த 10 நாட்களாக திருவிழா நடந்து வந்தது.
கோவிலை பூட்டிய அதிகாரிகள்
இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு ஒரு தரப்பினர் சாமி கும்பிட வந்தபோது, கோவில் பூட்டப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்த தகவல் அறிந்த ஆர்.டி.ஓ. பரிமளம் இருதரப்பினரிடையே மோதல் ஏற்படாமல் இருக்க கோவிலை பூட்ட உத்தரவிட்டார்.
இதையடுத்து ஜெயங்கொண்டம் தாசில்தார் ஸ்ரீதர் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரியம்மன் கோவிலை பூட்டினர். மேலும், அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சாலை மறியல்
இதையடுத்து, கோவிலை மீண்டும் திறக்கக்கோரி உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று இரவு வரை கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இந்த ஆண்டு திருவிழா நடத்தக்கூடாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்தநிலையில் ஒரு தரப்பை சேர்ந்த கிராம மக்கள் தத்தனூர் பொட்டக்கொல்லை பஸ் நிலையத்தில் கோவில் திருவிழாவை நடத்த வேண்டும் என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story