விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்


விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 17 May 2022 10:38 PM IST (Updated: 17 May 2022 10:38 PM IST)
t-max-icont-min-icon

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோபி அருகே விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோபி அருகே விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 
கான்கிரீட் தளம்
பவானிசாகர் அணையில் இருந்து கரூர் மாவட்டம் அஞ்சூர் மங்கலப்பட்டி வரை 200 கிலோ மீட்டர் தூரத்துக்கு கீழ்பவானி வாய்க்கால் கடந்த 1958-ம் ஆண்டு வெட்டப்பட்டது. இந்த வாய்க்காலில் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் நேரடியாக 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்களும், மறைமுகமாக 1 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.
இந்த நிலையில் கீழ்பவானி வாய்க்காலில் கடை மடை வரை தண்ணீர் செல்வதில்லை எனக்கூறி, வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
ஆதரவு- எதிர்ப்பு
ஆனால் இந்த திட்டத்துக்கு ஒரு தரப்பு விவசாயிகள் ஆதரவும், ஒரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள். 
இந்த திட்டத்தில் விவசாயிகள் பாதிக்காத வகையிலும், கசிவு நீர் திட்டங்கள் பாதிக்காத வகையிலும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி விவசாயிகளை சந்தித்து கருத்து தெரிவித்து உள்ளார். மேலும் இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தையும் நடத்தினார்.
உண்ணாவிரத போராட்டம்
இந்த நிலையில் வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கோபி அருகே உள்ள உக்கரம் கிராமத்தில் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட கீழ்பாவனி பாசன பாதுகாப்பு இயக்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. 
இந்த போராட்டத்துக்கு சத்தியமங்கலம் வட்டார தலைவர் ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரவி கலந்து கொண்டு உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார்.
இதில் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் செங்கோட்டையன், இயற்கை வாழ்வுரிமை இயக்கத்தை சேர்ந்த பொடாரன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர். 

Next Story