சொந்த வீட்டில் நகைகளை திருடி கள்ளக்காதலனுடன் உல்லாசமாக சுற்றிய பெண:இருவரும் கைது


சொந்த வீட்டில் நகைகளை திருடி கள்ளக்காதலனுடன் உல்லாசமாக சுற்றிய பெண:இருவரும் கைது
x
தினத்தந்தி 17 May 2022 9:40 PM GMT (Updated: 17 May 2022 9:40 PM GMT)

பெங்களூருவில், சொந்த வீட்டில் ஒரு கிலோ தங்க நகைகளை திருடி கள்ளக்காதலனுடன் உல்லாசமாக சுற்றிய பெண் கைது செய்யப்பட்டார். அவரது கள்ளக்காதலனும் கைதானார்

பெங்களூரு: பெங்களூருவில், சொந்த வீட்டில் ஒரு கிலோ தங்க நகைகளை திருடி கள்ளக்காதலனுடன் உல்லாசமாக சுற்றிய பெண் கைது செய்யப்பட்டார். அவரது கள்ளக்காதலனும் கைதானார்.

கணவரை பிரிந்தவர்

பெங்களூரு அம்ருதஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஜக்கூரு லே-அவுட் பகுதியில் வசித்து வருபவர் தீப்தி (வயது 24). இவருக்கு திருமணம் முடிந்து விட்டது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த தீப்தி தனது தாயுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கார் ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் எடுக்க ஓட்டுநர் பயிற்சி பள்ளிக்கு தீப்தி சென்றார்.
அப்போது அவருக்கு மதன் (27) என்பவர் கார் ஓட்ட பயிற்சி அளித்தார். இதனால் அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 

ஆனால் மதனுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இதுபற்றி தெரிந்தும் மதனை, தீப்தி காதலித்து வந்து உள்ளார். இந்த நிலையில் பணக்கஷ்டத்தில் சிக்கி தவித்து வந்த தனது காதலனுக்கு உதவ தீப்தி முடிவு செய்தார்.

ஒரு கிலோ நகை திருட்டு

அதன்படி தனது வீட்டில் இருந்த நகைகளை கொஞ்சம், கொஞ்சமாக திருடி வந்து மதனிடம் கொடுத்தார். அந்த நகையை ஒரு நிதி நிறுவனத்தில் அடகு வைத்து அதன்மூலம் கிடைத்த பணத்தில் மதனும், தீப்தியும் பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக சுற்றி வந்தனர். இவ்வாறாக வீட்டில் இருந்து ஒரு கிலோ நகைகளை தீப்தி திருடி மதனுக்கு கொடுத்து உள்ளார். 

இந்த நிலையில் வீட்டில் இருந்த நகைகள் காணாமல் போனது பற்றி தெரிந்ததும் தீப்தியிடம் அவரது தாய் கேட்டு உள்ளார்.ஆனால் இதற்கு தீப்தி சரியாக பதில் சொல்லவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து அம்ருதஹள்ளி போலீஸ் நிலையத்தில் ஒரு கிலோ நகைகளை திருடியதாக தீப்தி மீது அவரது தாயே புகார் அளித்தார். 

2 பேர் கைது

அந்த புகாரின்பேரில் போலீசார் தீப்தியை பிடித்து விசாரித்த போது வீட்டில் இருந்து நகைகளை திருடி காதலனுக்கு கொடுத்தது தெரியவந்தது. 

இதையடுத்து தீப்தியையும், மதனையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.36 லட்சம் மதிப்பிலான நகைகள் மீட்கப்பட்டு உள்ளது. 

Next Story