கருணாநிதி நினைவிடத்தில் தி.மு.க.வின் வெற்றியை காணிக்கையாக்குவோம் மு.க.ஸ்டாலின் பேச்சு


கருணாநிதி நினைவிடத்தில் தி.மு.க.வின் வெற்றியை காணிக்கையாக்குவோம் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 25 March 2019 11:14 PM GMT (Updated: 2019-03-26T04:44:58+05:30)

கருணாநிதிக்கு கொடுத்த கடைசி வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்றும், தி.மு.க.வின் வெற்றியை அவரது நினைவிடத்தில் காணிக்கையாக்குவோம் என்றும் மு.க.ஸ்டாலின் பேசினார்.

காஞ்சீபுரம்,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் செல்வத்தை ஆதரித்தும், திருப்போரூர் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் செந்தில் என்ற இதயவர்மன் ஆகியோரை ஆதரித்தும் காஞ்சீபுரத்தில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மோடி பிரதமராக ஏற்கனவே தேர்ந்தெடுப்பதற்கு முன்னால், மக்களிடத்தில் வாக்கு சேகரிக்கும் பொழுது அவர் சொன்னது ஊழல் இல்லாத ஆட்சியை நான் தருவேன் என்று உறுதிமொழி சொன்னார். ஆனால் இன்றைக்கு எடப்பாடியோடு கூட்டணி வைத்திருக்கின்றார் என்று சொன்னால் ஊழலோடு இந்த ஊழல் கூட்டணி அமைந்து இருக்கின்றது தவிர வேறல்ல எனவே, எந்த வித்தியாசமும் கிடையாது.

இந்தியாவில் இதுவரை நடந்த ஆட்சிகளில் ஊழல் இல்லாத ஆட்சி தான் என்னுடைய ஆட்சி என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. எடப்பாடியோடு கூட்டணி வைத்திருக்கும் மோடி இனி ஊழலை பற்றி பேசலாமா?.

லோக்பால் அமைப்பிற்கு தலைவரை நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இறுதி எச்சரிக்கையாக அறிவிக்கின்றது. ஆனால், இதுநாள் வரையில் அந்த லோக்பால் அமைப்பிற்கு தலைவரை நியமிக்காமல் இருந்ததற்கு என்ன காரணம்?. அப்படி நியமித்திருந்தால் இந்த அரசில் ஊழல் வழக்கு ரோட்டிற்கு வந்து இருக்கும். சந்தைக்கு வந்திருக்கும். அதைச்செய்ய முடியாத காரியமாகக் கூட ஆகியிருக்கும் என்ற அச்சத்தின் காரணமாக பயந்து அதற்கு தலைவரை நியமிக்காமல் இருந்திருக்கின்றார்கள். ஆனால், இப்பொழுது ஏன் நியமித்திருக்கின்றார்கள்? இந்தத்தேர்தலில் நிச்சயமாக மோடி வெற்றி பெறப்போவதில்லை அவர் ஆட்சிக்கு வரமுடியாது என்பதை தெரிந்து அதை புரிந்து வைத்துக்கொண்டு இப்பொழுது நியமித்திருக்கின்றார்.

அதுமட்டுமல்லாமல் தேர்தல் வந்து விட்ட காரணத்தினால் மக்களை ஏமாற்றுவதற்காக திடீரென்று மதுரைக்கு வந்து, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.

அ.தி.மு.க.வை அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி அடமானம் வைத்து இருக்கின்றார். நாமெல்லாம் சில நேரங்களில் சில சூழ்நிலைகளில் பொருள்களை கொண்டு சென்று அடமானம் வைப்பது உண்டு. அதற்கு பிறகு நாம் அதை மீட்டுக் கொண்டுவந்து விடுகின்றோம். ஆனால் இங்கு இப்பொழுது ஒரு கட்சியை அமித்ஷாவிடம், மோடியிடம் அடகு வைத்திருக்கிறார்கள். சத்தியமாக சொல்லுகின்றேன். இனி உங்களால் அதை மீட்கவே முடியாது. அதை திருப்பி எடுத்துக்கொண்டு வரவே முடியாது. எனவே, குத்தகைக்கு எடுப்பது அடமானம் வைப்பது எடப்பாடிக்கு கைவந்த கலை. தன்னுடைய சொத்தை அடமானம் வைத்தால் அதில் நமக்கு கவலை இல்லை. அ.தி.மு.க கட்சியை அடமானம் வைத்தால் கூட நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் இப்பொழுது நீங்கள் அடமானம் வைத்து இருப்பது முதல்-அமைச்சர் பதவியை, அதை பார்த்துக்கொண்டு நாங்கள் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டுமா? அதை எங்களால் சகித்துக் கொண்டிருக்க முடியுமா? அப்படிப்பட்டவர்களைத் தான் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று கேட்க உங்களைத் தேடிவந்து இருக்கின்றோம்.

விரைவில் மத்தியில் அதைத்தொடர்ந்து மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் வந்து உருவாகின்ற பொழுது, கொடநாடு விவகாரத்தில் உண்மையை கண்டுபிடித்து உரியவருக்கு தண்டனை தருவோம். தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு சொல்லியிருக்கிற திட்டங்கள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று சொன்னால், உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.

சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம் என்பது கருணாநிதியின் வாக்குறுதி. இது அவரின் வாக்குறுதி மட்டுமல்ல கருணாநிதியின் மகனான மு.க.ஸ்டாலினின் வாக்குறுதியும் அதுதான்.

கருணாநிதியின் மகன் பாதையையும் மாற மாட்டான், அவன் வாக்குறுதியும் மீற மாட்டான். கருணாநிதி உடல் நலிவுற்று இருக்கக்கூடிய நேரத்தில் கடைசியாக நான் அவரிடத்தில் பேசுகின்ற நேரத்தில் ஒரு வாக்குறுதி கொடுத்தேன். நிச்சயமாக உறுதியாக தமிழ்நாட்டில் நீங்கள் எதிர்பார்ப்பது போல் உங்கள் தலைமையில் பீடுநடை போடக்கூடிய தி.மு.க. ஆட்சியை உருவாக்குவோம் என்ற உறுதிமொழி கொடுத்தேன். ஆனால், அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கு முன்பே அவர் பிரிந்து விட்டார்.

அவர் உயிரோடு இருக்கின்ற பொழுதே, அதை நிறைவேற்றி காட்டிட வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால், காலத்தின் சூழ்நிலை அவரை நம்மிடமிருந்து பிரித்து விட்டது. காலம் அவரை பிரித்து இருந்தாலும் இன்றைக்கு நம்முடைய உள்ளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். கருணாநிதிக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம். கருணாநிதி நினைவிடத்தில் நாம் விரைவில் பெற இருக்கக்கூடிய வெற்றியை காணிக்கையாக்குவோம். அதற்கு உறுதி எடுப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story