டிஜிட்டல் பரிமாற்றத்திற்கான மானியம் தொடரும் டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பெட்ரோல் போடலாம் ‘கட்டணம் கிடையாது’ என்று மத்திய அரசு அறிவிப்பு


டிஜிட்டல் பரிமாற்றத்திற்கான மானியம் தொடரும் டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பெட்ரோல் போடலாம் ‘கட்டணம் கிடையாது’ என்று மத்திய அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 10 Jan 2017 12:00 AM GMT (Updated: 9 Jan 2017 8:14 PM GMT)

பெட்ரோல் விற்பனை நிலையங்களில் 13–ந் தேதிக்கு பிறகும் டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் கட்டணம் இன்றி பெட்ரோல், டீசல் போடலாம் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் ஒழிக்கப்பட்டதால் நாடு முழுவதும் ம

புதுடெல்லி

பெட்ரோல் விற்பனை நிலையங்களில் 13–ந் தேதிக்கு பிறகும் டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் கட்டணம் இன்றி பெட்ரோல், டீசல் போடலாம் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.

ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்

பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் ஒழிக்கப்பட்டதால் நாடு முழுவதும் மக்களிடம் பணத்தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், ரொக்கமில்லா பரிமாற்றத்தை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. அதன்படி ‘டெபிட்’, ‘கிரெடிட்’ கார்டுகள் மற்றும் செல்போன் செயலிகள் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பரிமாற்றங்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த கார்டுகள் மூலமான பரிமாற்றத்துக்கு பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு ‘சுவைப்’ கருவிகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த கருவிகளுக்கு எம்.டி.ஆர். எனப்படும் தனி பயன்பாட்டு கட்டணம் விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் பேரில் இதற்கான கட்டணங்கள் வகுக்கப்பட்டு உள்ளன.

ஒரு சதவீத வரி

அதன்படி ரூ.1,000–க்கு கீழ், ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை மற்றும் ரூ.2,000–க்கு மேல் என பெட்ரோல் நிரப்பி விட்டு, ‘டெபிட்’ கார்டு மூலம் பணம் செலுத்தினால், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முறையே 0.25 சதவீதம், 0.50, ஒரு சதவீதம் என கட்டணம் செலுத்த வேண்டும். இதைப்போல ‘கிரெடிட்’ கார்டு மூலம் ஒருமுறை சுவைப் செய்தாலே 1 சதவீத கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டு இருந்த இந்த நடவடிக்கைக்கு பெட்ரோல் விற்பனையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் 9–ந் தேதி (நேற்று) முதல் கார்டுகளுக்கு பெட்ரோல், டீசல் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டது.

13–ந் தேதி வரை நிறுத்தம்

இதைத்தொடர்ந்து பெட்ரோல் விற்பனையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய வங்கி அதிகாரிகள், இந்த ஒரு சதவீதம் கட்டணம் விதிக்கும் முறையை மேலும் 5 நாட்களுக்கு அதாவது 13–ந் தேதி வரை நிறுத்தி வைப்பதாக கூறினர். இதைத்தொடர்ந்து கிரெடிட், டெபிட் கார்டுகளை பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மீண்டும் ஏற்றுக்கொண்டனர்.

இந்த ஒரு சதவீத கட்டண பிரச்சினை தொடர்பாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியை பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் நேற்று சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

கார்டுகள் ஏற்றுக்கொள்ளப்படும்

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிகளின்படி பெட்ரோல் விற்பனை நிலையங்களில் டெபிட், கிரெடிட் கார்டு பரிமாற்றங்களுக்கு தனி பயன்பாட்டு கட்டணம் (எம்.டி.ஆர்.) வசூலிக்கப்படும். ஆனால் இதை வங்கிகளா அல்லது எண்ணெய் நிறுவனங்களா, யார் ஏற்பது? என்பதுதான் பிரச்சினை.

இது குறித்து இருதரப்பும் விவாதித்து வருகிறது. இது குறித்த பேரங்களும், பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறது. 13–ந் தேதிக்குள் இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டு, இணக்கமான ஒரு தீர்வு எட்டப்படும். பெட்ரோல் விற்பனை நிலையங்களில் 13–ந் தேதிக்கு பிறகும் டெபிட், கிரெடிட் கார்டுகள் ஏற்கப்படும்.

கார்டுகள் மூலம் டிஜிட்டல் பரிமாற்றத்தில் ஈடுபடுபவர்கள் 13–ந் தேதிக்கு பின்னரும் அவ்வாறு பணம் செலுத்தலாம் என்று உறுதி அளிக்கிறேன். அத்துடன் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கு அளிக்கப்படும் 0.75 சதவீத மானியமும் தொடர்ந்து வழங்கப்படும்.

செலுத்த தேவையில்லை

இதைப்போல டிஜிட்டல் பண பரிமாற்றத்தை நோக்கி நாட்டை செலுத்தும் வகையிலும், ரொக்கமற்ற பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் கார்டுகளுக்கான எம்.டி.ஆர். கட்டணத்தை வாடிக்கையாளர்கள் செலுத்த தேவையில்லை என கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது.

அந்தவகையில் டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கான பரிமாற்ற கட்டணத்தை வாடிக்கையாளர்கள் செலுத்த தேவையில்லை. வருகிற காலங்களில் எந்த வித டிஜிட்டல் பணபரிமாற்றங்களுக்கும் குறிப்பாக பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நடைபெறும் பரிமாற்றத்துக்கான சுமையை வாடிக்கையாளர்கள் மீது திணிக்கமாட்டோம்.

இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறினார்.


Next Story