பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ‘‘நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி பாதைக்கு சென்றுவிட்டது’’ : பினராயி விஜயன்


பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ‘‘நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி பாதைக்கு சென்றுவிட்டது’’ : பினராயி விஜயன்
x
தினத்தந்தி 11 Jan 2017 4:08 AM GMT (Updated: 11 Jan 2017 4:08 AM GMT)

‘‘பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி பாதைக்கு சென்றுவிட்டது’’, என்று கேரளா முதல்–மந்திரி பினராயி விஜயன் பேசினார்.


சென்னை,

‘‘பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி பாதைக்கு சென்றுவிட்டது’’, என்று கேரளா முதல்–மந்திரி பினராயி விஜயன் பேசினார்.

அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் (ஏ.ஐ.பி.இ.ஏ.) 28–வது தேசிய மாநாடு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 8–ந்தேதி தொடங்கியது. நேற்று 3–வது நாள் மாநாடு நடந்தது. மாநாட்டில் பல்வேறு நாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வங்கி கூட்டமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பினராயி விஜயன் பேசியதாவது:–

உயர் மதிப்புடைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று கடந்தாண்டு நவம்பர் 8–ந்தேதி பிரதமர் மோடி அறிவித்தார். எந்த வித முன்யோசனை இல்லாமலும், யாரிடமும் ஆலோசனை கேட்காமலும் அவசரம் அவசரமாக இப்படி ஒரு பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.பிரதமரின் இந்த தன்னிச்சையான நடவடிக்கையால் நாட்டின் முன்னேற்றம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. முக்கியமாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி பாதைக்கு சென்றுவிட்டது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 12.6 சதவீதம் என்ற நிலையில் இருந்த நாட்டின் பொருளாதாரம், தற்போது 7 சதவீதமாக குறைந்திருக்கிறது.

பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் நாட்டில் உள்ள விவசாயிகள், ஏழை மக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர். தொழில் நிறுவனங்கள் முடங்கியுள்ளது. சிறுதொழில்கள் அடியோடு வீழ்த்தப்பட்டு இருக்கிறது.

மோடியின் ‘துக்ளக் முறை’ நடவடிக்கையால் நாட்டில் கூட்டுறவு கடன் வழங்கும் சங்கங்கள் கடந்த 2 மாதங்களாக முடங்கி உள்ளன. கூட்டுறவு சங்கங்கள் மூலம் தான் ஏழை–எளியோர் கடன் பெற்று வருகின்றனர். பல கோடி கணக்குகள் கூட்டுறவு வங்கிகளில் பதியப்பட்டு உள்ளது. கேரளாவிலும் இதே நிலை தான் காணப்பட்டது.ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு அறிவித்த வைத்தியநாதன் குழு பரிந்துரைகளை செயல்படுத்தாத காரணத்தினால் தான் எங்கள் மாநிலத்தில் கூட்டுறவு வங்கிகள் வலுவான நிலையில் உள்ளன. 

இந்தியாவிலேயே கேரளா மாநிலம் இந்த வி‌ஷயத்தில் முன்னோடியாக இருக்கிறது. கேரளாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ரூ.3.7 லட்சம் கோடி அளவில் முதலீடு உள்ளது.அதே வேளையில் எஸ்.பி.ஐ. வங்கி தலைமையின் கீழ் ஸ்டேட் பாங்க் ஆப் மைசூரு, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் மகாராஷ்டிரா உள்ளிட்ட 5 வங்கிகளை கொண்டுவர முயற்சி எடுக்கப்பட்டது. அதற்கு எதிராக கேரளா சட்டசபையில் தனி தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


Next Story