தமிழக முன்னாள் கவர்னர் பர்னாலா மரணம் தலைவர்கள் இரங்கல்


தமிழக முன்னாள் கவர்னர் பர்னாலா மரணம் தலைவர்கள் இரங்கல்
x
தினத்தந்தி 15 Jan 2017 9:29 PM GMT (Updated: 15 Jan 2017 9:29 PM GMT)

தமிழக முன்னாள் கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்.

சண்டிகார்

பர்னாலா மரணம்

தமிழகத்தில் முன்பு கவர்னராக இருந்தவர் சுர்ஜித் சிங் பர்னாலா. அவர் 1990–1991–ம் ஆண்டுகளிலும், 2004–ம் ஆண்டு முதல் 2011–ம் ஆண்டுவரையிலும் தமிழக கவர்னராக பணியாற்றினார்.

வயது மூப்பு காரணமாக அரசியலில் இருந்து பர்னாலா விலகி இருந்தார். சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் சண்டிகாரில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் அவருடைய உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். அவருக்கு வயது 91 ஆகும்.

பஞ்சாப் முதல்–மந்திரி

பர்னாலா 1925–ம் ஆண்டு அரியானா மாநிலத்தில் பிறந்தார். லக்னோவில் சட்டம் பயின்ற அவர் விடுதலை போராட்டங்களிலும் பங்கேற்றார். அகாலி தளம் கட்சியில் சேர்ந்த அவர் படிப்படியாக முன்னேறி அக்கட்சியின் தலைவராக ஆனார்.

1977–ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் மந்திரிசபையில் மத்திய மந்திரியாக பர்னாலா பணியாற்றினார். பின்னர் 1985–ம் ஆண்டு முதல் 1987–ம் ஆண்டு வரை பஞ்சாப் மாநில முதல்–மந்திரியாக இருந்தார். 1998–ல் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் விவசாயத்துறை மந்திரியாக பொறுப்பு வகித்தார்.

தலைவர்கள் இரங்கல்

பர்னாலா தமிழகம் மட்டுமன்றி உத்தரகாண்ட், ஆந்திரா மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளிலும் கவர்னராக பணியாற்றினார். புதுச்சேரி, ஒரிசா (தற்போதைய ஒடிசா) ஆகிய மாநிலங்களிலும் கூடுதல் கவர்னர் பொறுப்பு வகித்தார்.

பர்னாலாவின் மறைவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, பஞ்சாப் முதல்–மந்திரி பிரகாஷ் சிங் பாதல், தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வித்யாசாகர் ராவ்

தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–

பர்னாலா மரணம் அடைந்ததை அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவர் மூத்த அரசியல் மேதையாகவும், தேசியவாதியாகவும், பாராளுமன்ற வாதியாகவும், புத்தி கூர்மை மிகுந்த நிர்வாகியாகவும் திகழ்ந்தார்.

மத்திய மந்திரியாகவும், பஞ்சாப் முதல்–மந்திரியாகவும், பல மாநிலங்களில் கவர்னராகவும் பணியாற்றிய அவர் விவசாயிகள் மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வு மேம்பட தனது வாழ்வை அர்ப்பணித்தவர். பணிவுமிகுந்த, இறைவனிடம் பெரும் பக்தி கொண்ட மனிதராகவும் திகழ்ந்தார். பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவரது மறைவு நாட்டுக்கும், குறிப்பாக பஞ்சாப் மாநிலத்துக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன், அவரது ஆன்மா அமைதி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம்

தமிழக முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–

பர்னாலாவின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த துயரம் அடைந்தேன். அரசியல் அனுபவம் மிக்க தலைவரான அவர் தமிழக மக்களின் மனதில் சிறப்பான இடத்தை பெற்றவர்.

சிறந்த நிர்வாகியை நாடு இழந்துவிட்டது. பர்னாலாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி இருக்கிறார்.

மு.க.ஸ்டாலின்

தி.மு.க. செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–

பர்னாலா காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. தமிழகத்தின் மீது அக்கறை கொண்டவரும், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேரன்புக்குரிய நண்பருமான பர்னாலா, என்னிடத்திலும் மிகுந்த அன்பு கொண்டவர். உள்ளாட்சித்துறை அமைச்சர் பொறுப்பிலும், துணை முதல்வர் பொறுப்பிலும் நான் இருந்தபோது தமிழகத்தின் வளர்ச்சி குறித்து என்னிடம் கேட்டறிந்தவர்.

கவர்னர் பதவிக்கு மதிப்பும், பெருமையும் தேடித்தரும் வகையில் ஜனநாயக நெறிமுறைகளுடன் செயல்பட்டவர் பர்னாலா. அவரது மறைவுக்கு தி.மு.க. சார்பிலும், தலைவர் கருணாநிதி சார்பிலும் என் நெஞ்சார்ந்த இறுதி வணக்கத்தினை செலுத்தி, அவரது பிரிவால் துயரப்படும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேற்கண்டவாறு மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார்.

ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சுர்ஜித் சிங் உடல்நல குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணா துயரம் அடைந்தேன். 75 ஆண்டுகால பொது வாழ்க்கையில் எந்த ஊழல் புகாருக்கும் ஆளாகாதவர் என்பது தான் பர்னாலாவின் சிறப்புகளின் உச்சமாகும். நேர்மையான, பொறுப்புள்ள அரசியல் தலைவர் ஒருவரை இந்தியா இழந்துவிட்டது. அவருடைய குடும்பத்தினருக்கு பா.ம.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.

வைகோ

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கவர்னராக பொறுப்பு வகித்த எனது மதிப்பிற்குரிய பர்னாலா இயற்கை எய்திய செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். அவர் அதிர்ந்து பேச மாட்டார். இனிமையாக பழகக்கூடியவர். அவரது மறைவு செய்தி என்னை மிகவும் பாதித்தது. அவரது குடும்பத்தாருக்கு ம.தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

ஜி.கே.வாசன்

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி நாட்டிற்கு பெருமை சேர்த்த பர்னாலாவின் இழப்பு இந்திய நாட்டிற்கு பேரிழப்பாகும். அவரது குடும்பத்தாருக்கு த.மா.கா. சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பிலும், தி.மு.க. சார்பிலும், பர்னாலாவின் உடலுக்கு தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினார்.

இறுதிச்சடங்கு

சுர்ஜித் சிங் பர்னாலாவின் சொந்த கிராமமான பர்னாலாவில் நேற்று அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடந்தது. அவருடைய சிதைக்கு அவரின் மகன் ககன்ஜித் சிங், பேரன் சமர்பிரதாப் சிங் ஆகியோர் இணைந்து தீ மூட்டினர்.


Next Story