ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக டெல்லியில் வக்கீல்கள், மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக டெல்லியில் வக்கீல்கள், மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Jan 2017 9:47 PM GMT (Updated: 19 Jan 2017 9:47 PM GMT)

சுப்ரீம் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றும் தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்று டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றும் தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்று டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மண்டி ஹவுஸ் பகுதியில் இருந்து ஜந்தர் மந்தர் பகுதிக்கு ஊர்வலமாக சென்ற அவர்கள், அங்கு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், விலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா’வை தடை செய்யக்கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் டெல்லி பல்கலைக்கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவர்களும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் மயில்சாமி கூறுகையில், தமிழ் கலாசாரத்தையும், பண்பாட்டையும் பாதுகாக்கும் வகையில் கட்சி சார்பற்ற முறையில் நடைபெறும் போராட்டம் இது என்றார்.

மற்றொரு வக்கீலான ஆனந்தசெல்வம் கூறுகையில், தமிழ் கலாசாரத்தை அழிப்பதுதான் ‘பீட்டா’வின் நோக்கம் என்றும், உள்நாட்டு காளைகளை அழித்துவிட்டு வெளிநாட்டு காளைகளை இந்திய சந்தைக்கு கொண்டு வர ‘பீட்டா’ முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார். 

Next Story