பாதுகாப்பு கவுன்சில் செயலகத்திற்கு 10 மடங்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டது


பாதுகாப்பு கவுன்சில் செயலகத்திற்கு 10 மடங்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டது
x
தினத்தந்தி 3 Feb 2017 8:53 AM GMT (Updated: 3 Feb 2017 8:53 AM GMT)

மத்திய மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் பாதுகாப்பு கவுன்சில் செயலகத்திற்கு 10 மடங்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

கடந்த நிதியாண்டில் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் செயலகத்திற்கு (என்எஸ்சிஎஸ்) ரூ. 33 கோடி ஒதுக்கப்பட்டது, ஆனால் செலவு ரூ. 81 கோடியாக இருந்தது. இவ்வாண்டு பாதுகாப்பு கவுன்சில் செயலகத்திற்கு 10 மடங்கு அதிகமாக ரூ. 333 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. என்எஸ்சிஎஸ் ஒரு ஆலோசனை குழுவாக செயல்படுகிறது, பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு நிபுணர்களை கொண்டு உள்ளது. என்எஸ்ஏ துணை தலைவர் அரவிந்த் குப்தா தலைமையில் இயங்குகிறது. பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு மற்றும் பிற முக்கியமான விவகாரம் தொடர்பாக ஆலோசனை வழங்குவது என்எஸ்சிஎஸ் அமைப்பின் முக்கியமான பொறுப்பாகும்.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விவகாரம் தொடர்பான முக்கிய ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

இப்போது தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருப்பவர் அஜித் தோவல், பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துக் கொண்டிருந்த நிலையை மாற்றி, இந்தியா பதிலடி தாக்குதலை முன்னெடுக்கும் என்பதை உரி பயங்கரவாத தாக்குதலை அடுத்து நடத்திக்காட்டியதில் முக்கிய பங்காற்றியவர் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல். 

தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் கடந்த 1198-ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியில் பிரஜேஷ் மிஸ்ரா தலைமையில் அமைக்கப்பட்டது. இந்தியாவின் முதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட பிரஜேஷ் மிஸ்ரா, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கார்கில் பிரச்சனை உள்ளிட்டவற்றுக்கு தீர்வு காண்பதில் முக்கிய பங்கு வகித்தவர். தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலக பணியை கட்டமைத்து, செயல்படுத்துவதில் முக்கிய பங்காற்றியவர் பிரஜேஷ் மிஸ்ரா. தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்திற்கு கடந்த 2011-12 பட்ஜெட்டில் ரூ. 17.43 கோடி ஒதுக்கப்பட்டது. 2012-13 பட்ஜெட்டில் குறிப்பிட்ட அளவு உயர்த்தப்பட்டது, ரூ. 20.33 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2013-14-ல் ரூ. 26.06 கோடியாக உயர்த்தப்பட்டது. 

மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்த பின்னர் 2014-2015-ல் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்திற்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டது, ரூ. 44.46 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பல்வேறு துறையை சேர்ந்த நிபுணர்கள் இச்செயலகத்தில் பணியாற்றி வருகிறார்கள், இப்போது பா.ஜனதா அரசு கூடுதல் கவனம் செலுத்துவது செயலகத்தின் செயல்பாட்டை மேலும் வலுப்படுத்தும் என கருதப்படுகிறது.

Next Story