உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி மீது மோடி கடும் தாக்கு


உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி மீது மோடி கடும் தாக்கு
x
தினத்தந்தி 6 Feb 2017 12:00 AM GMT (Updated: 2017-02-05T23:57:35+05:30)

உத்தரபிரதேச தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி சமாஜ்வாடி- காங்கிரஸ் கூட்டணியை கடுமையாக தாக்கி பேசினார்.

அலிகார்,

உத்தரபிரதேச தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி சமாஜ்வாடி- காங்கிரஸ் கூட்டணியை கடுமையாக தாக்கி பேசினார்.

உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அலிகார் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் சமாஜ்வாடி- காங்கிரஸ் கூட்டணியை கடுமையாக தாக்கினார். அவர் கூறியதாவது:-

தடுக்கத் தவறிவிட்டார்

அகிலேஷ் யாதவ் அரசு கடந்த 5 ஆண்டுகளில் வளர்ச்சிப் பணிகள் எதையும் மேற்கொள்ளவில்லை. ஊழல், வகுப்பு மோதல்கள், வேண்டியவர்களுக்கு சலுகை அளிப்பது என எதையுமே அவர் தடுக்கவில்லை. கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையையும் வழங்கவில்லை.

அலிகாரில் செயல்பட்டு வந்த பூட்டு தொழிற்சாலைக்கு மின்சாரம் வழங்க முடியாததால் அது இழுத்து மூடப்பட்டது. வேலை வாய்ப்புக்காக இளைஞர்கள் நேர்முகத் தேர்வுக்கு செல்லும்போது லஞ்சம் கொடுத்தால்தான் வேலை என்ற நிலை உருவாக்கப்பட்டது.

ரூ.40 ஆயிரம் கோடி மிச்சம்

மாநிலத்தில் கட்சி எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகளின் சிபாரிசுகள் இருந்தால்தான் வேலை கிடைக்கும் என்ற அவல நிலையும் உருவானது. அரசு வேலைக்காக ஏழைகள் தங்களது நிலத்தையும், சொத்துகளையும் விற்க நேர்ந்தது.

இதனால் மத்திய அரசு 3 மற்றும் 4-ம் நிலை ஊழியர்களுக்கான வேலைக்கு நேர்முகத் தேர்வு முறையை ரத்து செய்தது. மதிப்பெண் அடிப்படையில் தகுதி நிர்ணயிக்கப்பட்டு வேலை வாய்ப்பை வழங்க உத்தரவிட்டது. இதனால் லஞ்சம் கொடுப்பது நின்று போனது.

ஆதார் அட்டையை ஓய்வூதிய திட்டத்துடன் இணைத்ததால் ரூ.40 ஆயிரம் கோடியை மிச்சம் பிடித்து இருக்கிறோம். இந்த பணத்தை ஊழல் பெருச்சாளிகள் தின்று வந்ததற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

எதிர்க்கட்சிகள் அறியவில்லை

பண மதிப்பு நீக்க நடவடிக்கையை எடுத்தபோது, மோடி எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை என்று அவர்கள் (எதிர்க்கட்சிகள்) நினைத்தனர். ஆனால் வங்கிகளில் அனைத்து பணத்தையும் டெபாசிட் செய்வதற்கான வழிமுறைகள் எங்களிடம் உள்ளது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

இந்த பணம் இளைஞர்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சி போன்ற நல்ல பயன்பாட்டுக்காக வங்கிகளுக்கு வர விரும்பினோம். இந்த விஷயத்தில் எனக்கு ஆதரவாக இருந்த 125 கோடி மக்களுக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டு இருக்கிறேன்.

ஊதித் தள்ளப்படும்

மோடி அரசுக்கு டெல்லி மேல்-சபையில் பெரும்பான்மை கிடைத்துவிட்டால், அவர் சட்ட விதிகளை கடுமையாக்கி ஊழல்வாதிகளை பிடித்து விடுவார் என்று பயந்துபோய்தான் சமாஜ்வாடியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து இருக்கிறது. அதனால்தான் கருப்பு பணத்தை ஆதரிப்போருக்கு எதிரான நடவடிக்கையை முடுக்கிவிட்டு பாடம் கற்பித்து வருகிறேன்.

நீங்கள்(அகிலேஷ் யாதவ்) எத்தனை பெரிய கூட்டணி அமைத்தாலும் உங்களால் உத்தரபிரதேசத்தில் வீசும் பா.ஜனதா என்னும் பலத்த புயலில் காங்கிரசும், சமாஜ்வாடியும் ஊதித் தள்ளப்படும். இதனால்தான் முதல்-மந்திரி பயப்படுகிறார். உத்தரபிரதேச மக்கள் மாற்றத்தையும், நீதியையும் விரும்புகின்றனர்.

மின்சாரம் வரும்

உத்தரபிரதேசத்தில் சட்டம்- ஒழுங்கு மிகவும் சீர்குலைந்து உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரவுடிகள் சாம்ராஜ்யத்தை ஒழித்து கட்டுவோம். சட்டம் ஒழுங்கை சீர் செய்வோம். மின்சாரம் வழங்குவோம். சாலைகள் அமைப்போம்.

நாட்டின் அனைத்து மூலை முடுக்குகளுக்கும் மின்சாரம் கிடைக்க இரவு பகலாக நாங்கள் பணியாற்றி வருகிறோம். இதில் நல்ல முன்னேற்றம் கண்டும் உள்ளோம். ஒவ்வொரு தொழிற்சாலையிலும், வீட்டிலும் விரைவில் மின்சாரம் வரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story