பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு


பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 6 Feb 2017 10:45 PM GMT (Updated: 2017-02-07T03:35:40+05:30)

பாராளுமன்றத்தில் கேள்வி நேரம் முடிந்ததும், மல்லிகார்ஜூன கார்கே எழுந்து, இ.அகமது மரணம் தொடர்பான பிரச்சினையை கிளப்பி, விவாதம் நடத்த வேண்டும் என்று கூறினார்.

புதுடெல்லி,

பாராளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எழுந்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் இ.அகமது மரணம் தொடர்பான பிரச்சினையை கிளப்பி, அதுகுறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று கூறினார். அவருக்கு ஆதரவாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலரும் குரல் எழுப்பினார்கள்.

ஆனால் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை தொடங்குமாறு சுற்றுலா மற்றும் கலாசார துறை மந்திரி மகேஷ் சர்மாவுக்கு அழைப்பு விடுத்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் உறுப்பினர்களும், தேசியவாத காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்களும் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிறிது நேரத்தில் மீண்டும் சபைக்குள் வந்தனர்.

முன்னதாக, நேற்று சபை கூடியதும் இ.அகமது மரணம் தொடர்பான பிரச்சினையை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கிளப்பியதால் சபையில் அமளி ஏற்பட்டது. இதனால் பகல் 12 மணி வரை சபை ஒத்திவைக்கப்பட்டது.


Next Story