மருத்துவ பரிசோதனைக்காக சோனியா காந்தி வெளிநாடு சென்றார்


மருத்துவ பரிசோதனைக்காக சோனியா காந்தி வெளிநாடு சென்றார்
x
தினத்தந்தி 9 March 2017 8:45 PM GMT (Updated: 9 March 2017 7:49 PM GMT)

மருத்துவ பரிசோதனைக்காக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளிநாட்டுக்கு சென்றார்.

புதுடெல்லி,

மருத்துவ பரிசோதனைக்காக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளிநாட்டுக்கு சென்றார்.

உடல்நல குறைவு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கடந்த சில மாதங்களாக உடல்நல குறைவால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் அவர் வாகன பேரணி நடத்தியபோது திடீரென உடல் நலம் குன்றியதால், டெல்லிக்கு விமானத்தில் அழைத்து செல்லப்பட்டு, ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பிறகு சர் கங்காராம் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்றார்.

உடல் நலம் இல்லாததால், அவர் வெளிநிகழ்ச்சிகளை தவிர்த்து வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களிலும் அவர் பிரசாரம் செய்யவில்லை.

வெளிநாடு சென்றார்

இந்நிலையில், சோனியாகாந்தி நேற்றுமுன்தினம் இரவு வெளிநாட்டுக்கு புறப்பட்டு சென்றார். அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்று இருப்பதாகவும், ஹோலி பண்டிகை முடிந்த பிறகு, 13–ந் தேதிதான் அவர் டெல்லி திரும்புவார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

அவர் எந்த நாட்டுக்கு சென்றுள்ளார் என்று கட்சி தரப்பில் எதுவும் கூறப்படவில்லை. இருப்பினும், அவர் அமெரிக்காவுக்கு சென்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ராகுல் கவனிப்பார்

வெளிநாட்டுக்கு செல்வதற்கு முன்பு, கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி மற்றும் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். அவர் டெல்லி திரும்பும்வரை, அவரது கட்சிப்பணிகளை ராகுல் காந்தி கவனிப்பார்.


Next Story