மும்பையில் பயங்கரம்: ஓட, ஓட விரட்டி வாலிபர் சுட்டுக்கொலை


மும்பையில் பயங்கரம்: ஓட, ஓட விரட்டி வாலிபர் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 13 March 2017 11:00 PM GMT (Updated: 2017-03-14T02:58:55+05:30)

மும்பை தாராவி குடிசை பகுதியில் வாலிபர் ஒருவர் ஓட, ஓட விரட்டி சுட்டுக்கொல்லப்பட்டார்.

மும்பை,

மும்பை தாராவி குடிசை பகுதியில் வாலிபர் ஒருவர் ஓட, ஓட விரட்டி சுட்டுக்கொல்லப்பட்டார்.

வாலிபர் மீது துப்பாக்கிச்சூடு

மும்பை தாராவி கேளாபகார் பகுதியில் நேற்று மதியம் வாலிபர் ஒருவரை, கையில் துப்பாக்கியுடன் 2 பேர் துரத்தினார்கள். அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக தலைதெறிக்க ஓடிய அந்த வாலிபரை அரப்கல்லியில் உள்ள ஒரு சந்துக்குள் வைத்து அந்த நபர்கள் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளினர்.

நெற்றியில் குண்டு துளைத்த அந்த வாலிபர் ரத்த வெள்ளத்தில் மயங்கினார். துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஓடி வந்தனர். ஆனால் கொலையாளிகள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

மோப்ப நாய் மூலம்...

பொதுமக்கள் இதுபற்றி தாராவி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வாலிபரை மீட்டு சயான் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அந்த வாலிபரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

கொலை நடந்த இடத்தில் மோப்ப நாய் மூலம் சோதனை நடத்தப்பட்டது. தடயவியல் நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர்.

யார் அவர்?

உயிரிழந்த வாலிபருக்கு 30 வயது இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். கொலையாளிகள் அவரின் செல்போன் மற்றும் பணப்பையை தூக்கி சென்றிருப்பதும் தெரியவந்தது.   அந்த வாலிபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், கொலை நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்யும் நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளனர்.

Next Story