தேசிய செய்திகள்

கனிமொழி எம்.பி. தலைமையில் டெல்லியில் தி.மு.க. பேரணி + "||" + MP Kanimozhi Headed DMK Rally NEW DELHI

கனிமொழி எம்.பி. தலைமையில் டெல்லியில் தி.மு.க. பேரணி

கனிமொழி எம்.பி. தலைமையில் டெல்லியில் தி.மு.க. பேரணி
பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லியில் கனிமொழி எம்.பி. தலைமையில் தி.மு.க. பேரணி நடைபெற்றது.

புதுடெல்லி,

பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லியில் கனிமொழி எம்.பி. தலைமையில் தி.மு.க. பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பேரணி, ஆர்ப்பாட்டம்

பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி, டெல்லியில் தி.மு.க. மகளிரணி சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. பேரணி, மண்டி அவுஸ் பகுதியில் தொடங்கி ஜந்தர் மந்தர் பகுதியை அடைந்ததும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். மகளிரணி தலைவர் காஞ்சனா, புரவலர்கள் நூர்ஜகான், விஜயா தாயன்பன், துணைத்தலைவர்கள் சங்கரி நாராயணன், பவானி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

குரல் கொடுக்கும் தி.மு.க.

ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:–

மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தலைவர்களில் முதன்மையானவராக தி.மு.க. தலைவர் கருணாநிதி திகழ்கிறார். செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக பிரதமருக்கே கடிதம் எழுதி இருக்கிறார்.

இப்படி இந்த மசோதாவுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் இயக்கம் தி.மு.க. தான். அதன் தொடர்ச்சியாக, நீட்சியாகத்தான் இந்த ஆர்ப்பாட்டத்தை தி.மு.க. மகளிரணி கையில் எடுத்திருக்கிறது.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பாராளுமன்ற மேல்சபையில் நிறைவேற்றப்பட்ட மகளிர் மசோதா, ஆட்சி மாற்றத்தால் காலாவதி ஆகிவிட்டது. எனவே, அது மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும், மேல்சபை மற்றும் மக்களவையில் நிறைவேற்றப்பட வேண்டும்.

வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்

பா.ஜனதா அரசிடம் ஒன்றை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். ‘உங்களது தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று மீண்டும் மீண்டும் வாக்குறுதி அளித்தீர்கள். எனவே அதை நிறைவேற்றித் தாருங்கள்’ என்று கேட்கிறோம்.

33 சதவீத இட ஒதுக்கீடு என்பதுதான் பெண்களின் கோரிக்கை. 50 சதவீதம் என்பதுதான் நியாயம். முதலில் 33 சதவீத ஒதுக்கீட்டை கொடுங்கள். பிறகு 50 சதவீதத்தை நாங்கள் பெற்றுக்கொள்வோம். சம உரிமையை அடையத்தான் இட ஒதுக்கீட்டை கேட்கிறோம்.

இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறும் வரை தி.மு.க. மகளிரணியின் போராட்டம் ஓயாது. எனவே, நிறைவேற்றுவதை தவிர மத்திய அரசுக்கு வேறு வழி இல்லை. தமிழர்கள் நினைத்தால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. ஜல்லிக்கட்டு போராட்டமே அதற்கு உதாரணம்.

இவ்வாறு கனிமொழி பேசினார்.

எம்.பி.க்கள்

பின்னர் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளிக்கையில், ‘இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம். விவசாயிகள் பிரச்சினையையும் தி.மு.க. எழுப்பும். மத்திய நிதி மந்திரி நேரம் தந்தால் விவசாய பிரதிநிதிகளை அழைத்துச் சென்று பேச வைப்பேன்’ என்று கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் எம்.பி.க்கள் திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜா, ரங்கராஜன், ரேணுகா சவுத்ரி, சுப்ரியா சுலே, ரஞ்சனி பட்டேல், முன்னாள் எம்.பி. வசந்தி ஸ்டான்லி, முன்னாள் அமைச்சர் தமிழரசி உள்ளிட்டோர் பேசினார்கள். பிரசார அணி நிர்வாகி சிம்லா முத்துசோழன் உள்பட ஏராளமான நிர்வாகிகள், மகளிரணி தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மகளிர் தொண்டரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் நன்றி கூறினார்.