உ.பி.யில் இறைச்சி கூடங்களுக்கு சீல்! துண்டே கபாபி விற்பனை பாதிப்பு உரிமையாளர்கள் கவலை


உ.பி.யில் இறைச்சி கூடங்களுக்கு சீல்! துண்டே கபாபி விற்பனை பாதிப்பு உரிமையாளர்கள் கவலை
x
தினத்தந்தி 24 March 2017 5:57 AM GMT (Updated: 24 March 2017 5:57 AM GMT)

உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த இறைச்சி கூடங்கள் மீதான நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேசம் முழுவதும் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் இறைச்சி கூடங்கள் (கால்நடைகள் வெட்டப்படும் இடம்) தொடர்ச்சியாக சீல் வைக்கப்பட்டு வருகிறது. மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி ஆட்சி முடிந்து பாரதீய ஜனதா ஆட்சி தொடங்கியதுமே சீல் வைக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கிவிட்டனர். சீல் வைப்பு நடவடிக்கையானது மாநிலத்தில் அசைவ பிரியர்களுக்கு பெரும் இழப்பாக உருவாகி உள்ளது. மாநிலத்தில் அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று துண்டே கபாபி. இப்போது மட்டன் மற்றும் எருமை இறைச்சி பற்றாக்குறை காரணமாக அசைவ பிரியர்கள் துண்டே கபாபியை ருசிக்கமுடியாது தவித்து வருகின்றனர் என கூறப்படுகிறது.

லக்னோவில் உள்ள துண்டே கபாபி கடையின் உரிமையாளர் பக்கர் பேசுகையில், “எங்களுடைய தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது, நகர் முழுவதும் மட்டன் மற்றும் எருமை இறைச்சி பற்றாகுறை நிலவுகிறது. எனவேதான் நாங்கள் இப்போது சிக்கன் விற்பனை செய்கிறோம்,” என்று கூறிஉள்ளார். மேலும் பக்கர் பேசுகையில் யோகி ஆதித்யநாத்தின் நடவடிக்கையானது போற்றுதலுக்குரியது, ஆனால் உரிமை பெற்று தொழில் செய்து வருபவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்பதை அவர் உறுதிசெய்ய வேண்டும் என கூறிஉள்ளார். 
 
பாரதீய ஜனதா உத்தரபிரதேச சட்டசபை தேர்தலின் போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் இறைச்சி கூடங்கள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Next Story