பலாத்காரம் செய்யப்பட்டு, ஆசிட்டை குடிக்க வைக்கப்பட்ட பெண்ணுக்கு யோகி ஆதித்யநாத் ஆறுதல்


பலாத்காரம் செய்யப்பட்டு, ஆசிட்டை குடிக்க வைக்கப்பட்ட பெண்ணுக்கு யோகி ஆதித்யநாத் ஆறுதல்
x
தினத்தந்தி 24 March 2017 11:00 AM GMT (Updated: 24 March 2017 11:00 AM GMT)

கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, ஆசிட்டை குடிக்க வைக்கப்பட்ட பெண்ணுக்கு யோகி ஆதித்யநாத் ஆறுதல் கூறினார்.

லக்னோ,

லக்னோ ரெயில் நிலையம் அருகே நேற்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, வலுக்கட்டாயமாக வாயில் ஆசிட் ஊற்றப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். உயிருக்கு ஆபத்தான நிலையில் பெண் லக்னோ கிங் ஜார்ச் மருத்துவ கல்லூரியில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இரண்டு ஆண்கள் அவரை ஆசிட்டை வலுக்கட்டாயமாக குடிக்க செய்து உள்ளனர் என குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. சிகிச்சைபெற்று வரும் பெண்ணை இன்று அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் சந்தித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 1 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று கூறிய யோகி ஆதித்யநாத் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய போலீசுக்கு உத்தரவிட்டார். குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்து உள்ளார். 

ஏற்கனவே பாதிக்கப்பட்ட பெண் பல்வேறு முறை கொடூரமான தாக்குதல்களை எதிர்க்கொண்டு உள்ளார் என தெரியவந்து உள்ளது. கடந்த 2008-ம் ஆண்டும் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். சொத்து பிரச்சனை காரணமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். அப்போதும் அவர் மீது ஆசிட் வீசப்பட்டு உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக அப்போது மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இதுவரையில் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட பெண் 2012-ம் ஆண்டு கத்தியால் தாக்கப்பட்டு உள்ளார். 2013-ம் ஆண்டு அவர் மீது மீண்டும் ஆசிட் வீசப்பட்டு உள்ளது. தாக்குதலின் போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர் பெற்று திரும்பும் போது எல்லாம் மீண்டும் கொடூரத் தாக்குதல்களை எதிர்க்கொண்டு வருகிறார். 

நேற்று லக்னோ ரெயில் நிலையத்தில் ரெயில் ஒன்றில் தனியாக வந்தபோது இரண்டு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். பின்னர் அவருடைய வாயில் குண்டர்கள் ஆசிட்டை ஊற்றி உள்ளனர். குற்றவாளிகள் தப்பிவிட்டனர். ரெயில்வே அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பெண்ணை பார்த்து மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். அவருக்கு லக்னோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story